142 எம்.பி இருந்த சுதந்திரக் கட்சி 2 எம்.பியாக குறைந்துள்ளது - மகிந்த அமரவீர தெரிவிப்பு

6 months ago

142 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி தற்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணியின் பிரதித் தலைவருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சிறிசேனவின் தலைமையின் கீழ் கட்சி சீரழிந்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிட்டதாக அமரவீர குறிப்பிட்டார்.

திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத்திட்டத்தின் ஓர் அங்கமாக இளம் தொழில்முனைவோருக்கு இலவச கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமரவீர மேலும் கூறுகையில்-

சுதந்திரக் கட்சி இப்போது எங்கள் கைகளில் உள்ளது. பயனற்ற கூறுகள் இனி எங்கள் கட்சியில் இல்லை. முன்னாள் தலைவரின் ஆட்சியின் கீழ், சுதந்திரக் கட்சி துண்டு துண்டாக உடைந்தது, கட்சி ஆதரவாளர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லை.

142 எம்.பிக்களுடன் முன்னாள் தலைவர் சிறிசேனவிடம் நாம் ஒப்படைத்த சுதந்திரக் கட்சி வெறும் இரண்டு எம்.பி.க்களுடன்தான் முடிந்தது.

முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க, கட்சி அழிக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாததால் சிறிசேனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தார்.

சுதந்திரக் கட்சிக்கு அதிகமான தலைவர்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

உண்மையில் சுதந்திரக் கட்சிக்கு சட்ட ரீதியாக நியமிக்கப்பட்ட ஒரே ஒரு தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆவார்.

நாங்கள் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறோம், சட்டவி ரோத செயல்களில் ஈடுபடமாட்டோம்.

இதனால்தான் எங்களின் நியமனங்களுக்கு எதிராக முன்னாள் தலைவர் கோஷ்டியை சேர்ந்த யாரும் வழக்கு தொடரவில்லை. சுதந்திரக் கட்சி இப்போது சட்டரீதியாக எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

அண்மைய பதிவுகள்