தமிழ் மக்களின் விடிவுக்கான செயற்பாடுகளுக்குப் பெரும்பங்காற்றி இயங்கியவரும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் தலைமை இயக்குநருமாகிய விராஜ் மென்டிஸ் நேற்றுக் (16) காலமானார்.
ஜேர்மன் பிரமனிலுள்ள பன்னாட்டு மனித உரிமைகள் அமையம் ஒன்றினைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் இவர் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாக பயணித்தவர்.1984இல் இருந்து பயணிப்பவர்
2009 தமிழின அழிப்பின் பின்பாக தமிழருக்குக் கிடைக்கக் கூடிய தீர்வை நோக்கி மாறுபடாத கருத்துக் கொண்டு செயற்பட்டவர். விராஜ் மென்டிஸ் 1984 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் உடனிருந்து செயற்பட்டு வந்தவர்.
2009 போருக்குப் பின்னர் பாரிய அநீதி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக்கொள் வதற்கான முதல் அடியை உலகம் எடுத்து வைக்கத் தயாராக இருக்கின்றது என்ற செய்தியை நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களுக்கும், பன்னாட்டுச் சமூகத்துக்கும் சொல்ல வைத்தவர் விராஜ் மென்டிஸ்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் சமூகத்துக்கு முற்றிலும் வெளியே இருந்து, இந்த முயற்சி எடுக்கப்படுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.
தமிழர் போராட்டத்தை பன்னாட்டளவில் முடக்கிய வேளை யில் அதை எதிர்த்து அரசியல் அடிப்படையிலும் சட்ட அடிப் படையிலும் தொடர்ந்து போராடியவர்களில் விராஜ் மென்டிஸ் முதன்மையானவராவார்.
சுவிஸ் அரசானது பல தமிழர் அமைப்பு செயற்பாட்டாளர்களை கைது செய்தபோது அதை எதிர்த்து இவர் தீவிரமாகப் போராடினார். தமிழ் அமைப்புகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு அல்ல. மாறாகத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதை முதன்மை நோக்காகக் கொண்ட விடுதலை அமைப்பு என்று சுவிசின் உச்ச நீதிமன்றமானது 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததற்குப் பின்னால் விராஜ் மென்டிசின் கடுமையான உழைப்பு இருக்கிறது. “டேவிட் கமரூனுடன் தேநீர் அருந்துவதைப் பாரிய அடை வாகக் கொள்வது நகைப்புக்கிடமானது. உங்களால் அவர்களை மாற்ற முடியாது. மாறாக, மேற்குலகின் அதிகார நடுவங்கள் தான் தமிழர்களை ஏமாற்றி, திசைமாற்றி தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகச் செய்யும்" என்று இடித்துரைப்பதன் மூலம் மேற்குலகின் சூழ்ச்சிக்குத் தமிழர் பலியாகக் கூடாது என்று தமிழர்களிடத்தில் எச்சரிக்கை உணர்வை விராஜ் மென்டிஸ் ஏற்படுத்தி வந்தார்.
பங்காற்றுபவர்களையும் இலங்கைக்கு நாடுகடத்த அந்தந்த நாடுகளால் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராகப் போராடி அந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதில் முன்னின்று உழைத்த விராஜ் மென்டிஸ் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் அளவற்ற மதிப்பும் பற்றும் என்றும் வைத்திருக்கின்றனர்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலை மையையும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கும் நல்லதொரு சிங்களத் தோழராக, போராடும் தோழனாக எம்முடன் உறுதியாகப் பயணித்த விராஜ் மென்டிசின் உழைப்பைத் தமிழர் என்றும் மனங்கொள்ள வேண்டும்.
சிங்கள இனத்தவர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. உரோம் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தைத் தொடர்பு கொள்வதே இந்த விடயத்தில் சிறந்த முன்னெடுப்பாக இருக்கும் என்று முனைவர் அன்டி ஹிகின்பொட்டம் என்பவர் சுட்டிக்காட்டினார்.
வியட்நாமில் முன்னெடுக்கப்பட்ட 'ரஸல்- சாத்ர' தீர்ப்பாயத்தின் பாரம்பரியத்தின் வழியில், தொடர்ந்து செயற்படும் இத்தீர்ப்பாயம், உலக அதிகார சக்திகளின் செல்வாக்குக்கு அப்பாற்பட்டது என்றும், அதேநேரம், அறநெறிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற் கொள்ளவல்லது என்றும் முனைவர் ஹிகின்பொட்டம் வாதிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நடைமுறை உறுப்பினராக அயர்லாந்து இருந்ததனாலும், ஆரம்பத்தில் சிறீலங்காவில் சமாதானத்தை அது ஊக்குவித்ததாலும், காலணியத்துக்கு எதிரான வரலாற்றை அது கொண்டிருந்ததன் காரணத்தாலும் அதன் தலைநகரான டப்ளின் நகரத்தில் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு 2009இல் நடைபெற்றது.
நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான நம்பகமான சூழலை இலங்கை சமாதானத்துக்கான அயர்லாந்து மன்றமும், பிரேமன் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பும் இணைந்து மேற்கொண்டன. சிறீலங்காவுக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வுக்கு வேண்டிய நிதியும், வளங்களும் தமிழர் அல்லாத அமைப்புகளிடம் இருந்தே வரவேண்டும் என்பதை விராஜ் வலியுறுத்தினார். விராஜ் மென்டிஸ் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழர்க்காகவும், தமிழர் உரிமைக்காகவும். தமிழர் விடுதலைக்காகவும் தன்னை அர்ப்பணித்து பல தசாப்த காலங்களாக பன்முக ஆற்றலோடு அனைத்துத் தளங்களிலும் முன்னின்று பங்காற்றியவர்.
அவரது இழப்பானது தமிழினம் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. தனது இறுதி மூச்சுவரை தமிழர் உரிமைக்காகவே வாழ்ந்தவர்.