


வடபகுதி மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வர்த்தக திருழாவான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 , இம் மாதம் 24, 25 மற்றும் 26 திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்திற்கு வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளுடன் 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது இம்முறை 15 வதுஆண்டாக மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd நிறுவனம் மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம் (CCIY) இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை நடாத்தி வருகின்றது.
இந்த ஆண்டு 45,000 தொடக்கம் 60,000 வரையான பார்வையாளர்கள்வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 350 க்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயம், தொழில்நுட்பம் , விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்டவர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளன.
கைத்தொழில்துறை வளர்ச்சியில் சந்தை வாய்ப்பு தொடர்பில் வடக்கில் இருந்த பாரிய ஒரு இடைவெளியானது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்தை மறுத்துவிட முடியாது .
அதுமட்டுமல்லாது வடக்கின் தொழில் முயற்சிகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளதுடன் எமது உற்பத்திகள் இன்று வடக்கில் மாத்திரமன்றி தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளையும் ஆக்கிரமித்து உள்ளது என்றால் இவ்வாய்ப்புகளை உருவாக்கலுக்கான அடித்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாதது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும், வடக்கிலுள்ள சமூகங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்வேறு வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிந்து கொள்வதற்கும் , தெற்கு மற்றும் சர்வதேச தொழில் முயற்சியாளர்கள்வடக்கிலுள்ள சக தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்து வியாபார பொருளாதார தொழில் நுட்ப ரீதியில் தொடர்புகளை வளர்க்கவும் எமது தொழில் முயற்சியாளர்கள் நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் மற்றும் அவற்றின் வினைத்திறனான செயல்பாடுகளை அறிந்து பயனடையும் ஒரு களமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அமைந்துள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு இம்முறை எமது உற்பத்திகளையும் முன்னிலைப்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமானது விசேட ஒழுங்கமைப்புக்களை மேற்கொணடுள்ளது.
“DOMESTIC ZONE” தனி காட்சிக் கூடங்களாக இம்முறை அமைக்கப்பட்டுள்ளது.
மற்றைய காட்சிக்கூடங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலையில் இக்காட்சிக் கூடங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் வழமை போலவே தொழிற்துறைகள்திணைக்கழத்திற்கு 40 வரையான நுண்ணிய சிறிய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக 10 காட்சிக் கூடங்கள் அமைப்பதங்கான இலவசஇட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்கள் தமது வியாபார வலையமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான களமாகவும் இக் கண்காட்சி அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறுவர்களை மகிழ்சியூட்டும் நோக்குடன் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு (CARNIVAL) களியாட்ட நிகழ்வுகளும் இம்முறை விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த நிகழ்வு அடையப்பெற்ற எதிர்பாராத வளர்ச்சி தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளதுடன், வடக்கில் கிடைக்கப்பெறுகின்ற வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்பில் தாம் அடைந்த சாதகமான விளைவுகள் பற்றி வர்த்தகர்கள் நேரடி அனுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதியில் எமது பிரதேசம் மறைமுகமான துரித வியாபார வாய்ப்புக்களை ஒவ்வொரு வருடமும் பெற்று வருகின்றது.
வடக்கிலுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதுடன் உணவகங்கள் , போக்குவரத்து , அச்சுப்பதிப்பகங்கள் , விளம்பர நிறுவனங்கள் மற்றும் பண்ட இடம்பெயர்வு மேலாண்மை போன்ற ஏனைய சேவைகளும் சடுதியான வியாபார வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கின்றன.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொனிப் பொருளான பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் என்பதன் அர்த்தத்தையும் அதனால் நாம் அடைந்துள்ள மற்றும் அடையப் போகும் சாதகமான விளைவுகளையும் கருத்தில் கொண்டு சகல தரப்பினரும் செயல்பட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
