தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்.-- அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் தெரிவிப்பு

3 hours ago



தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று(10.01.2025) ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறியபோது 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் புதிய அரசியல் யாப்பை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன் போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து தீர்வு யோசனையை முன்வைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்து தனித்து தீர்வு யோசனைகளை முன் வைத்தால் அவை ஒருபோதும் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது.

சுமந்திரன் இது விடயத்தில் அரசியல் யாப்புக் குழுவில் இரு தமிழ்ப் பிரதிநிதிகளை இணைப்பதில் முனைப்புக் காட்டி வருவதாகவே செய்திகள் வருகின்றன. 

சுமந்திரன் சூழ்ச்சிமூலமாக சாணக்கியனையும், சத்தியலிங்கத்தையும் அரசியலமைப்புக் குழுவுக்கு அனுப்பி நல்லாட்சிக்கால “ஏக்கியராச்சிய” திட்டத்தை தூசி தட்டி மேடையேற்றவே அவர் முனைகின்றார்.

இந்த மோசமான சதி முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும். 

சிங்களப் பெரும்பான்மையுள்ள குழுவில் தமிழர் இருவர் அங்கம் வகித்து எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

தமிழ்த் தரப்பு குழுவில் அங்கம் வகிப்பதை முன்னிறுத்தாமல் வெளியே நின்று கொண்டு தமிழ் மக்கள் சார்பில் தீர்வு யோசனையை முன்வைத்து பேரம் பேச வேண்டும்.

தமிழரசுக் கட்சி பலவீனமடைந்தால் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலமும் பலவீனமடையும்.

இந்த விவகாரத்தில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக பங்குபற்ற வேண்டுமே தவிர உதிரியாக பங்குபற்றக் கூடாது.

உதிரிகளாக பங்குபற்றுதல் பெருந் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுப்படும் நிலையே உருவாகும் என்றார்.

அண்மைய பதிவுகள்