வடக்கு, கிழக்கை இணைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்று புதிய ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் ஜெய்சங்கருக்கு வலியுறுத்து.
இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈழத் தமிழருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தேர்தலை நடத்த வேண்டும் என்று புதிய ஜனாதிபதி அநுரகுமாரவை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சியின் (பா. ம.க) நிறுவுநர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டவை வருமாறு,
"இலங்கையின் புதிய ஜனாதிபதியாக சிங்கள பேரினவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4ஆம் திகதி இலங்கை செல்கிறார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும் அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இலங்கைப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அங்கு நிகழ்த்தப்பட்ட கொடிய போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்பட வில்லை.
இலங்கை அரசமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆம் திருத்தத்தின் படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தினாலும் கூட எந்தப் பயனும் ஏற்படவில்லை.
இத்தகைய சூழலில் இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
13ஆம் அரசியல் சட்டத்திருத்தத்தின்படி தமிழர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகார பரவல் என்பது மிகமிகக் குறைவானதுதான் என்றாலும்கூட அதுவும்கூட 35 ஆண்டுகளாக சாத்தியமாகவில்லை.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை ஆட்சி செய்த கட்சிகள் அல்லாத புதிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகியுள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைந்து தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்றும்படி இலங்கை ஜனாதிபதியை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அனைவரையும் விடுதலை செய்யும் படியும் மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும் படியும்
இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டுமென்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொள்கிறேன்.' -என்றார்.