யாழ்.செம்மணி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவு

பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் ஆனந்தராஜா பார்வையிட்ட நிலையில் அந்த மனிதப் புதை குழி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவு விடுத்துள்ளார்.
கடந்த வாரம் அந்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
எரியூட்டி அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்தகாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காகக் கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஒப்பந்தக்காரரினால் நல்லூர் பிரதேச சபைக்கு இவ் விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மயான அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்தனர்.
அருகில் இருந்த இராணுவ முகாமில் புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகளை அகற்றும்போது அவை இந்தப் பகுதிக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்கள் வெளியிட்டனர்.
இதன் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் ஆனந்தராஜா, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்றனர்.
அந்தப் பகுதியை பார்வையிட்ட நீதிவான் சட்ட வைத்திய அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு விடுத்தார்.
அந்தப் பிரதேசத்தை அண்டிய பகுதியில் 2011 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
