தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.-- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தெற்கு அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நாளை, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் எனவும் இதன் காரணமாக, எதிர்வரும் 23 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் எனவும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாள்களாக பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"தென் தமிழகம் மற்றும் அதனை அண்மித்த குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் எதிர்வரும் 21 ஆம் திகதியளவில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக, 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக் கடல் பகுதிகளில், நாளை தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மறுதினம் தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35முதல் 45 கிலோ மீற்றர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
23 ஆம் திகதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில், லட்சத்தீவு, மாலைதீவு மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 இடையிடையே 55 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும், என்பதால் மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்." என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.