இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஐ. நாவுக்கான இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

2 months ago



இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று                ஐ. நாவுக்கான இந்தியத் தூதுவர் எல்டோஸ் மத்தியூ புன்னூஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஐ.நா. அவையில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"பாகிஸ்தான் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்படக் கூடியவை.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் அதன் உள்நாட்டு பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.

பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் தொடர்பானவை. இந்தப் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்பதை அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

அதனை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியா துடிப்பான ஜனநாயகத்தை கொண்ட நாடு. ஆனால்,பாகிஸ்தான் அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டைக் கொண்டது.

போலியான தேர்தல்களை நடத்துவது, எதிர்க்கட்சித்            தலைவர்களை சிறையில் அடைப்பது, அரசியல் ரீதியில் எழும் உரிமை குரல்களை அடக்கி ஒடுக்கும் செயலில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, கறைபடிந்த அவர்களது ஜனநாயகத்தை பார்த்துப் பழகி உண்மையான ஜனநாயக நடைமுறைகளை போலியானவை என்று பாகிஸ்தான் கருதத் தொடங்கிவிட்டது.

அண்டை நாடுகளின் எல்லைகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் ஒரு கொள்கையாகவே கடைப் பிடித்து வருகிறது.

அதற்கான ஆட்கள் மற்றும் ஆயுத உதவிகளை அந்த நாடு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இது மிகவும் கண்டனத்துக்குரியது”- என்றார்.

அண்மைய பதிவுகள்