திருகோணமலையில் மக்களின் உறுதிக் காணிகளை பௌத்தபிக்கு கையகப்படுத்தி விவசாயம் செய்வதாக மக்கள் குற்றச்சாட்டு

2 months ago




திருகோணமலை - திரியாய் வளத்தாமலைப் பகுதியில் பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் உறுதிக் காணிகளை பௌத்தபிக்கு அடாவடித்தனமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய குச்சவெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, வளத்தாமலைப் பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் மற்றும் அரிசி மலை விகாராதிபதியின் தனியார் உறுதிக் காணி எனக்கூறப்படும் 18 ஏக்கர் காணிகளை அளந்து பௌத்த பிக்குவுக்கு கையளித்து ஏனையவற்றை மக்களுடைய விவசாய நடவடிக்கைக்கு வழங்குவதாக எட்டப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த அளவீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பகுதியில் சப்தநாக பப்பத வன செனசுன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கு 2020.05. 26 ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகையின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகத்தின் 04/10/62767 இலக்கம் கொண்டதும், மாகாண காணி ஆணையாளரின் உத்தரவின்  அடிப்படையில் 2020.10. 02 வெளியான வர்த்தமானி     அறிவித்தலின் மூலம் 20. 2342 ஹெக்டேயர் காணி          வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காணியையும், அப்பகுதியில் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரருக்கு இருப்பதாகக் கூறும் தனியார் உறுதிக் காணி 18 ஏக்கரையும் அளவிடும்                  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பூஜா பூமி எனும் பெயரில் மக்களுடைய காணிகளை அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலக வன்ச நாயக்க தேரர் ஆக்கிரமித்து வருவதாக குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் இந்த பிக்கு இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவித்து வருகிறார்.

எனவே அவரை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூவின மக்களும் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.