இலங்கை மட்டக்களப்பில் பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.-- அரச அதிபர் தெரிவிப்பு
வன்முறை சம்பவங்கள் எதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்படவில்லை, பாதுகாப்பு பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவிப்பு
செவ்வாய்கிழமை(12) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மாவட்டத்தில் தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதற்காக மாவட்டத்தில் 6,750 அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளனர்.
மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 46 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பாரிய வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை.
முப்படையினரும் மாவட்டத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரப் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் அனர்த்த நிலைகள் ஏற்பட்டால் அவற்றிற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனவும் பொதுமக்கள் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாவட்டத்தின் பிரதான வாக்கு எண்ணும் நிலையமான இந்து கல்லூரியில் தேர்தல் ஆயத்த பணிகள் சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்கிழமை கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
தேர்தல் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட உள்ள வாகனங்கள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகள் மாவட்டத்தில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வருகை தந்து வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லுமாறும் இதற்காக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட உள்ள வாகனங்கள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட உள்ளதாகவும் அதன் பின்பு தபால் மூல வாக்களிப்புகள் எண்ணப்படவுள்ளன.
இம்முறை தேர்தல் பணிகளில் 1,900 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதுடன், 87 விசேட கண்காணிப்பு பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இடம்பெற உள்ள தேர்தலை எவ்வித வன்முறைகளும் இன்றி அமைதியாக நடத்த அனைத்து தரப்பினரின் ஒத்துமைப்பு தேவை.
தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த அமைதியான காலகட்டத்தில் எவரும் சட்டவிரோத பிரச்சாரப் பணிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அதனை மீறி நடப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தேர்தல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும். என மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சி.பி.எம் சுபியான் இந்துக் கல்லூரியின் தேர்தல் பணிகள் பார்வையிட்டதன் பின் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.