காசாவைச் சேர்ந்த 2500 சிறுவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் வேண்டுகோள்

2 months ago



உயிராபத்தை எதிர்நோக்கி உள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவைச் சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

15 மாத காலமாக நீடித்த இஸ்ரேல் காசா யுத்தத்தின்போது காசாவில் மருத்துவ சேவையை வழங்கிய நான்கு மருத்துவர்களை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் சந்தித்துள்ளார்.

காசாவில் 2500 சிறுவர்களிற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக கடந்த வருடம் ஏப்பிரல் முதல் மே மாதம் வரை காசாவில் பணியாற்றிய கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் பெரோஸ் சித்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள 2500 சிறுவர்கள் உள்ளனர்,சிலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்,சிலர் நாளை அல்லது நாளை மறுதினம் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 2500 பேரில் அனேகமானவர்களிற்கு சாதாரண சிகிச்சை போதும் என தெரிவித்துள்ளார்.

3வயது சிறுவனிற்கு கையில் எரிகாயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயம் ஆறிவிட்டது, ஆனால் காயம்பட்ட திசு இரத்த ஓட்டத்தை துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அந்த சிறுவனிற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைகழக மருத்துவமனையின் அவசரசேவை மருத்துவர் ஆயிசா கானும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி முதலாம் திகதி வரை காசாவில் மருத்துவ சேவையை வழங்கியுள்ளார்.

அவர் கைதுண்டிக்கப்பட்ட பல சிறுவர்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவர்களிற்கு புனர்வாழ்வு இல்லை என தெரிவித்துள்ளார்.

கைகள் துண்டிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் புகைப்படங்களை அவர் காண்பித்துள்ளார்.

அவர்கள் இருவரும் ஒரு சக்கர நாற்காலியில் காணப்படுகின்றனர்.

அவர்கள் அந்த தாக்குல் காரணமாக அநாதைகளாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள ஆயிசாகான், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி மருத்துவ சிகிச்சை வழங்கினால் மாத்திரமே காப்பாற்றலாம் என தெரிவித்துள்ளார்.