இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும்.-- புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து

2 months ago



இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து

கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர் தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.

இதை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது.

இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது.

இதன் தொடர்ச்சியாக கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங் கூறுகையில், "ஆர். எஸ். எஸ். அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது.

எனவே, கனடாவில் அதைத் தடை செய்ய வேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும்.

சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதவர்கள் சிலர் காரணம் என்று கனடாவிலுள்ள றோயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (ஆர். சி. எம். பி.) குற்றஞ்சாட்டியுள்ளதன் மூலம் இதில் இந்தியாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது"-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கனடா பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய ஜனநாயகக் கட்சி எம். பிக்கள் பேசினர். "இந்தியாவிலுள்ள         ஆர். எஸ். எஸ். அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது.

அதை கனடாவில் தடை செய்ய வேண்டும். மேலும், இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.

கனடாவில் வசிக்கும்             சீக்கியர்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கைகள் வருகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

மேலும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்து வருகின்றனர்.

மேலும் சிலர் ஹோட்டல்களில் தங்கி பாதுகாப்புடன் உள்ளனர்”என்று தெரிவித்தனர்.

என். டி. பி. கட்சி எம். பி. ஹீத்தர் மெக்பெர்சன் கூறும் போது, "இந்தியாவுக்கு ஆயுதங்கள், இராணுவத் தளபாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்த வேண்டும்.

மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறை இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பா. ஜ.க. தலைவர்கள் கனடா வருவதற்கு தடை விதிக்க வேண்டும்" -என்றார். 

அண்மைய பதிவுகள்