
பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் 2 பிரபல வியாபாரிகள் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரும் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட் பட்ட அக்பர் கிராம சனசமூக வீதி முன்பாக உள்ள பகுதியில் மறைந்திருந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைதாகினர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய தேடுதல் மேற்கொண்ட போது இரு சந்தேக நபர்களும் பெருந் தொகையான கேரளக் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப் படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 54, 62 வயதுடையவர்கள் என்றும் நீண்ட காலமாக இச்சந்தேக நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளக் கஞ்சாவை விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதான இருவரில் ஒருவரிடம் 7 கிலோ கேரளக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் பெரிய நீலாவணையில் கைக்கடிகாரம் விற்பனை மற்றும் திருத்தகம் வைத்திருக்கும் நபர் என்பதுடன் 4 கிலோ கேரளக் கஞ்சாவை வைத்திருந்த மற்றைய சந்தேக நபர் கல்முனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகத்தை நடத்தி வந்தவர் என்பதும் மேலதிக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் வசமிருந்து பெருமளவான கேரளக் கஞ்சா பொதிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
