இலங்கை அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலையில் அமெரிக்கா சார் மேற்குலக நாடுகள். இதனால் தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள்.

5 months ago


இலங்கை அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலையில் அமெரிக்கா சார் மேற்குலக நாடுகள். இதனால் தமிழ் தேசிய அரசியல் களத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள்.

பூகோள அரசியல் களநிலவரங்களும் அதன் போக்கும் அடிக்கடி மாற்றமடையும் தன்மை கொண்டவை என்பதை எவரும் மறுக்க முடியாது. உலக அரசியல் ஒழுங்கை கட்டுப்படுத்தும் போட்டியிலும் அதனை தக்கவைக்கும் போட்டியிலும் பல வல்லரசு நாடுகள் தனியாகவும் கூட்டாகவும் செயற்பட்டு வருகின்றன. இதனால் காலத்து காலம் தேவையின் நிமிர்த்தம் பல நாடுகளின் கூட்டிணைவுகள் உருவாகின்றன.

இதன் அடிப்படையில் இதுவரை காலமும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தங்களின் தலைமையில் உலக நாடுகளின் கூட்டிணைவையும் , உலக அரசியலை கட்டுப்படுத்தும் கட்டுமானங்களையும் பேணிவருகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளின் கூட்டு புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருப்பது உலக ஒழுங்கிற்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது.  

பொருளாதார பலத்திலும், இராணுவ பலத்திலும் , மக்களின் தொகை மதிப்பிலும் BRICS கூட்டணிக்கே பலம் அதிகம் என்கின்றார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள். தங்களுக்கான தனியான வங்கி முறைமைகள் , பணம் , நீதி கட்டமைப்புக்கள் , இராணுவ கட்டமைப்புக்களை ஏற்படுத்தி கொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கே சவாலாக வளர்ச்சி கண்டுள்ளது BRICS கூட்டணி என்பதை பல அரசியல் நோக்கர்கள் வெளிப்படுத்துகின்றனர். 

இது இந்து சமுத்திரப் அரசியலின் கேந்திர மையமாக இருக்கின்ற இலங்கை அரசியலையும் பெருமளவில் பாதிக்கின்றது என்பதை நாம் ஆழமாக பார்க்க வேண்டும். 

தெற்கு அரசியலின் கட்டுப்பாட்டையும், பொருளாதார கட்டுப்பாட்டையும் பெருமளவில் சீனா கையகப்படுத்தி கட்டுப்படுத்தும் அதைவேளை தமிழர் தாயகபகுதிகளின் அரசியலையும் , பொருளாதாரத்தையும் பெருமளவில் இந்தியா கையகப்படுத்தி கட்டுப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது. ஆனால் இரண்டுமே BRICS கூட்டணி நாடுகள் என்பதோடு இது அமெரிக்கா சார் மேற்குலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் இலங்கை அரசியலில் மாறிநிற்கின்றது என்பதை இலகுவில் மறுக்க முடியாது.

எனவே இலங்கை அரசியலை கட்டுப்படுத்தும் போட்டியில் அமெரிக்கா சார் மேற்குலக நாடுகளுக்கும், இந்தியா, சீனா உள்ளடங்கலான BRICS நாடுகளுக்கும் பனிப்போர் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. 

இதனிடையே ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு களங்களையும், புலம்பெயர் தமிழர்களுக்கான வாழ்விடங்களையும் வழங்கிய அமெரிக்கா சார் மேற்குலக நாடுகள் எவ்வாறான அணுகுமுறைகளை கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எது எவ்வாறு இருந்தாலும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியையும் அது மீண்டும் எமது மக்களுக்கு இடபெறாததை உறுதிப்படுத்துவதற்கான தீர்வையும் எதிர்பார்க்கும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரட்சி கொண்ட மக்களாக நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதற்கான சமூகக் கட்டுமானங்களையும், மக்கள் கட்டமைப்புக்களையும் வலுப்படுத்த வேண்டியது தமிழ் தேசிய இனத்தின் தற்கால தேவையாகும். 



திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்

2024-08-01

அண்மைய பதிவுகள்