விடுதலைப் புலிகளால் பாதுகாத்த மக்களின் விவசாய, குடியிருப்பு நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரிக்கிறது. எம்.பி து.ரவிகரன் குற்றச்சாட்டு
2009 இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெருமளவான விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை தற்போது வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறு வனவளத் திணைக்களத்தால் அடாவடித் தனமாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வன்னிப் பகுதி மக்கள் கடந்த காலங்களில் இடப்பெயர்வைச் சந்தித்து மீள்குடியேறியது அனைவரும் அறிந்ததே.
சில இடங்களில் குறிப்பிட்டளவு காலங்களுக்குள்ளும், சில பகுதிகளில் நீண்டகாலங்களுக்குப் பின்னரும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் மக்கள் இடப்பெயர்வுக்கு முன்பதாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட காணிகள் தற்போது பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கின்றன.
தற்போது பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கும் எமது மக்களுக்குரிய காணிகளுக்கு, எவ்வித முன்னறிவிப்புகளுமின்றி வனவளத் திணைக்களத்தினர் எல்லைக் கல்லிடுகின்ற அடாவடித்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.