அறப் போராட்டக் காலத்தில் மாவையோடு இணைந்து தமிழீழ விடுதலைக் களத்தில் நின்ற அந்த நாள்களில் தோய்கின்றேன். காசி ஆனந்தன் இரங்கலில் தெரிவிப்பு

2 months ago



மாவை சேனாதியின் சாவைத் தாங்க முடியவில்லை. அறப் போராட்டக் காலத்தில் அவரோடு இணைந்து தமிழீழ விடுதலைக் களத்தில் நின்ற அந்த நாள்களில் தோய்கின்றேன்.

அழியா நினைவுகள் அவிழ்கின்றன.

இவ்வாறு கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் அஞ்சலியில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கொடிய சிங்களக் கொலைக் குற்றவாளிகளின் சிறைக் கூடங்களான வெலிக்கடை, போகாம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் அவரோடு நெடிய ஐந்து ஆண்டுகள் கொந்தளிக்கும் நெஞ்சோடு சிறையுண்டு கிடந்த காலத்தின் நினைவு.

சிங்களப் படை வெறியர்களின் படைத்தளமான வெலிசறை கைமுனு படை முகாமில் சிறகுடைந்த பறவையாக அவரோடு சிறை வாழ்வு கண்ட காலத்தின் நினைவு.

இலங்கை விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் நாளைப் புறக்கணிக்க வேண்டி எங்களோடு இணைந்து மட்டக்களப்பில் துண்டறிக்கைகளை மக்களிடையே வழங்கிக் கொண்டிருந்த போது, தளைப்படுத்தப்பட்டு, அதே நாளில் மட்டக்களப்புக் கல்லூரி ஒன்றில் வெடி குண்டு வீசப்பட்ட நிகழ்வோடு தொடர்புபடுத்தப்பட்டவர்களாய் கண்டி போகாம்பறை சிறைச்சாலையில் தள்ளப்பட்டு - தமிழர் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாபெரும் வழக்கறிஞர் சிவசிதம்பரம் அவர்களின் சட்டப் பேராற்றலால் விடுதலையான பழைய நினைவு.

கியூபாவில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விழாவில் அவரோடு இணைந்து, கலந்து ஈழத் தமிழர்களின் அடிமை வாழ்வை உலகின் பல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பேராளர்களிடம் பரப்பிய நினைவு.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அறப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்- முதன்முதலாகத் தளைப்படுத்தப்பட்டு நான் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு வாரங்கள் இடைவெளியில் என்னோடு சிறைச்சாலையில் தள்ளப்பட்ட முத்துக்குமாரசாமி (குமார்), வண்ணை ஆனந்தன், பூபதி, குட்டிமணி ஆகியோரை உள்ளடக்கிய 42 இளைஞர்களில் ஒருவராய் அவர் என்னைச் சந்திந்த முதல் நாளின் உணர்ச்சி மயமான நினைவு.

சிங்கள இனவெறிக் காவலர்களும் கொலைவெறிச் சிறையாளிகளும் அச்சமூட்டிய நிலையில் கொடிய சிங்களச் சிறைச்சாலைகளில் நாங்கள் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்ட போது எங்களில் ஒருவராய் அந்த உண்ணா நோன்பில் அவரும் கலந்து கொண்ட நெஞ்சைச் சிலிர்க்க வைக்கும் நினைவு.

இமை மூடி மாவை சேனாதி நிலையான தூக்கத்தில் இருக்கும் இவ் வேளையில் பழைய நினைவுகளில் என்னை இழந்தவனாய் நிற்கிறேன்.

ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் மாவை தொடந்தும் தேசிய நீரோட்டத்தில் இருப்பதென்றும் -நாடாளுமன்ற அரசியலைத் தொடர்வதென்றும் முடிவு செய்தார்.

நான் தலைவர் பிரபாகரன் அவர்கள் மூட்டிய நெருப்பில் நிற்பதென்று முடிவு செய்தேன்.

இருப்பினும், தமிழீழ விடுதலைக் கொள்கையை விட்டுக் கொடுக்காதவராகவே அவர் தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தார்.

எந்தக் காலத்திலும் மாவை சிங்கள இனவெறி அரசின் கைக்கூலியாக இருந்தார் என்று எவனும் பழி சுமத்த முடியாது.

அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த பத்து ஆண்டுகள் காலத்தில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மந்திரி பதவியை ஏற்றதில்லை என்பது அவர் தமிழரசு மரபைப் பேணினார் என்பதை அடித்துப் பேசும் எனக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுவதுண்டு.

ஆனால், கொள்கை வேறுபாடு இல்லை என்பதால் கருத்து வேறுபாடு பெரிய அளவில் நிலை கொள்ளவில்லை.

என் பொது வாழ்வில் நீண்ட நெடுங்காலம் என்னோடு உறவு கொண்டிருந்த அவர் திருவடிகளில் என் கண்ணீரை வைக்கின்றேன்.

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசுத் தலைவர்கள் மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருவதாக அறிகிறேன்.

முகம் கொடுத்து அவர்களை வரவேற்காதீர்கள்.

தமிழனைச் சாகடித்தவனுக்குத் தமிழனின் சாவில் அஞ்சலி செலுத்தும் தகுதி இல்லை.- என்றுள்ளது.

அண்மைய பதிவுகள்