மட்டக்களப்பில் நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை-- மக்கள் கவலை
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்று இருபது வருடங்களாகியும் இவ் அனர்த்தத்தின் மூலம் வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கத்தின் அறக்கட்டளை நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டம் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாகப் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்காகவும், அந்தக் குடும்பத்தவர்களில் தங்கி வாழும் 1232 பேரின் நன்மை கருதியும் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்தை பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்து வந்த வேளை தம்மை ஏமாற்றி வந்ததாகவும், தற்போது மக்கள் நல சேவைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த வீட்டுத் திட்டத்தை தமக்கு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி இவ்வீடமைப்புத் திட்ட நிர்மாணத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்பிரகாரம் சுமார் 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியைக் கொண்டு நவீன முறையில் 500 வீடுகள் இப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டன.
சில காரணங்களின் அடிப்படையில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 18 ஆண்டுகளாகியும் வீடுகள் உரியவர்களுக்கு வழங்கப்படாமலிருப்பது மிகுந்து வேதனையளிக்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.