முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவுகளை கடத்தி எழுச்சி கொள்ளும்

இறுதிப் போரில் உணவுக்கு கஷ்ரப்பட்ட மக்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கினர். இந்த கஞ்சியை வாங்குவதற்காக மக்கள் அங்கு சென்று வரிசையில் நின்ற போது அந்த இடத்தில் சிறிலங்கா படையினரின் குண்டுகள் விழுந்து நூற்றுக்கணக்கானோர் இறந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

கஞ்சிக்கே வழியில்லாமல் அவதிப்பட்ட அந்த நாட்களை உயிர் தப்பிய மக்கள் இன்று நினைக்கின்றனர். நினைவு கொள்கின்றனர்.

இன்று கஞ்சி வழங்கும் போது அன்றைய நினைவுகள் பல தலைமுறைக்கு கடத்தப்படும் என்பதால் இந்த நாளில் கஞ்சி வழங்குவதையே தடுப்பதற்கு சிறிலங்கா பொலிஸ், படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் எந்தப் பயமுமின்றி தமிழர் பகுதிகள் அனைத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை 

திருகோணமலை மூதூர் நீதிமன்றம் மட்டுமே கஞ்சி வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் கஞ்சி வழங்குவதற்கு தடை விதிக்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் 5 ஆம் மாதத்தில் கஞ்சி வழங்கி நினைவு கூர்வது வழமை. இந்த நினைவு கூர்வதை தடுப்பதற்காக சிறிலங்கா பொலிஸாரும், இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலை மாணவி உட்பட ஐவர் கைது 

கஞ்சி வழங்கி நினைவு கூர்வதற்கு திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட 5பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரவு 8:30 மணிக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் (13) திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டின் கீழ் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வி வினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரும், பொலிசாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெளிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்டதின் பின்னணி

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிஸாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டிருந்தார்.

காயத்துக்கு உள்ளான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக அமைப்புகள் பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நோய் பரவும் ஆபத்து என முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுக்க நினைக்கும் சிறிலங்கா பொலிஸார் வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும் அச்சுறுத்தும் கைது செய்யும் சிறிலங்கா அரசு நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையின் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.