வடக்கு - கிழக்கில் சமஷ்டித் தீர்வுக்கு இணங்குபவரையே ஆதரிப்போம்.-தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு முடிவு.

4 months ago


வடக்கு - கிழக்கில் சமஷ்டித் தீர்வுக்கு இணங்குபவரையே ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு முடிவு எடுத்துள்ளது.

வடக்கு - கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். அதைச் சிங்கள மக்களுக்கும் அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் ஜனாதிபதி வேட்பாளரை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக் கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியினுடைய நிலைப்பாடானது இணைந்த வடக்கு - கிழக்கிலே சமஷ்டி அடிப்படையிலான அதிகா ரப்பகிர்வுடைய ஆட்சி முறை ஏற்படுத்தப்படுவதாகும். இதுவே எங்களுடைய அரசியல் நிலைப்பாடு. இதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் யாராவது இணங்கி வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்கள் அரசியல் அறிக்கையில் எவ்வாறான செய்தியை சொல்லப் போகின்றார்கள் என்பதைப் பார்க்கப் போகின்றோம். சமஷ்டிக் கோரிக்கைகளை ஏற்றால் அது தொடர்பில் விஷேடமாக சிங்கள மக்களுக்கு, அவர்கள் தமிழர்களுக்கு எதைச் செய்யப் போகிறோம் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

இது தவிர நாங்களும் எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து வடிவில் தெளிவான ஓர் அறிக்கையாக வெளியிடுவோம். எங்களுடைய மக்களுக்கு, அரசியல் தலைமைத்துவம் வழங்குகின்ற கட்சி என்ற நிலைப்பாட்டில் அவ்வாறான ஒரு பொறுப்பை நாமும் உதாசீனம் செய்யாமல் வழிகாட்டல் அறிக்கையை ஜனா திபதித் தேர்தல் காலத்தில் வெளியிடுவோம்.

இதேவேளை - தமிழ்ப் பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவது என்று சில அரசியல் கட்சிகளும் சில சிவில் அமைப்புகள் என்று சொல்லுபவர்களும் செயற் படுகின்றனர். அதுவும் இன்றைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது.

இதற்கு முன்னரே இரண்டு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். கடந்த கூட்டத்தில் அரியநேந்திரன் சமுகமாகி இருந்தார். அந்தக் கூட்டங்களிலேயே நாங்கள் இப்போது இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில்லை என சொல்லியிருந்தோம். எங்களுடைய மக்களோடும் எங்களுடைய கட்சி உறுப்பினர்களோடும் தொடர்ந்து கலந்துரையாடுவது அவசியம் என்று கூறப்பட்டிருக்கின்றது. எனினும் நாம் இதற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்று ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை.

ஆனால், இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ்ப் பொதுவேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரி டம் விளக்கம் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவ ரைக்கும் கட்சி நிகழ்வுகள் எதிலும் அவருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது” -என்றார்.