பிரதமர் மோடி குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமின் தேஜ்பூரிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாமின் தேஜ்பூரிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் இந்த தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்.
அப்போது வீரர்களிடையே பிரதமர் கூறுகையில், "தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாத அரசு இங்கு அமைந்துள்ளது.
21-ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு நாம் நமது ராணுவத்தை, பாதுகாப்பு படைகளை நவீன வளங்களைக் கொண்டு புதுப்பித்து வருகிறோம்.
உலகின் மிகவும் நவீனமான ராணுவத்துடனான போட்டியில் நமது ராணுவத்தை நிறுத்த விரும்புகிறோம்.
இதன் அடிப்படை நோக்கமே பாதுகாப்புத்துறை தன்னிறைவைப் பெறுவதுதான்.
நாம் 1 தரைப்படை, 1 வான்படை, 1 கடற்படையை பார்க்கிறோம். ஆனால் அவர்களுக்குள் கூட்டுப் பயிற்சி உண்டு அதன்படி நாம் அவர்களை 111 ஆக பார்க்கலாம்." இவ்வாறு பிரதமர் பேசினார்.