யாழ்.உடுப்பிட்டியில் விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் சுவரொட்டி, கொடி பறந்தமை, குழப்பவாதிகளின் செயல் மக்கள் சுட்டிக்காட்டு.

1 month ago



யாழ்.வடமராட்சி, உடுப்பிட்டிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்துடன் சுவரொட்டி மற்றும் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இன்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி உடுப்பிட்டிப்  பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்துடன் கூடிய சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன என்றும் மறுநாள் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்துடன் கூடிய கொடியொன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச்சென்று அவற்றை மீட்டுச் சென்று சான்றுப்பொருளாக்கியதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சுவரொட்டிகள் மற்றும் கொடியுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தும் நட வடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

மாவீரர் நாள் நினைவேந்தல் வடக்கு கிழக்கில் சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இதனை குழப்புவதற்காக புலிச் சின்னத்துடன் சுவரொட்டி, புலிக் கொடி பறக்கவிடப்பட்டதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.