முல்லைத்தீவு விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவும். கையெழுத்து போராட்டம்
மாவீரர் தின நினைவேந்தலைச் சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து மாவீரர் தின நினைவேந்தலைச் சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் இணைந்து இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும் பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அபகரிக்கப்பட்ட துயிலும் இல்லக் காணிக்கு முன்பாகவே கையெமுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கியதைப் போன்று எங்களுடைய உறவுகளின் கல்லறைகள் இருக்கின்ற குறித்த காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்துத் தர வேண்டும்." என்று மாவீரர்களின் உரித்துடையவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்..