புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதானவர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு

3 months ago


வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை    நீதிமன்ற பதில் நீதிவான் நதீர் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டிலேயே இந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீர சிங்க தலைமையிலான பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்களை கைது செய்தனர்.

அத்துடன் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தியபோது சந்தேக நபர்களை நேற்றுத் திங்கட்கிழமை வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் நபர் உட்பட அவரது நண்பர்கள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் 28 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வர் மட் டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.