டியாகோ கார்சியாவில் தடுப்பு முகாமில் உள்ள 56 இலங்கைத் தமிழர்களை குமேனியா நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை
டியாகோ கார்சியாவில் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 56 பேர் தற்காலிகமாக குமேனியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ள இலங்கைத் தமிழர்கள் ஆறு மாதங்களின் பின்னர் அவர்கள் இங்கிலாந்துக்கு திரும்ப முடியும்.
அதே சமயம், இவர்களில் பலருக்கு நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்ல ஊக்குவிக்கப்படவுள்ளனர்.
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை ஆதாரம் காட்டி பி. பி. சி. செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
தீவிலும் ருவாண்டா நாட்டிலுமாகத் தங்கியுள்ள இந்த 56 இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசு தீர்வு ஒன்றை எட்டும் வரை அவர்கள் குமேனியாவில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகாமில் தங்கவைக்கப்படுவர் என்று கூறப் படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து சமுத்திரப் பகுதியில் படகு ஒன்றில் பயணித்த பல இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்களது படகு பழுதடைந்ததை அடுத்து டியாகோ கார்சியா தீவில் கரையொதுங்கி அங்கே புகலிடம் கோரியிருந்தனர்.
இலங்கையில் தங்களுக்கு பாதுகாப்புக் கிடையாது என்று கூறிய அவர்கள் அங்கிருந்து கனடா செல்லும் வழியிலேயே இடையில் கடலில் தத்தளிக்க நேர்ந்தது.
மொறீசியஸ் தீவுக் கூட்டங்களில் அடங்குகின்ற டியாகோ கார்சியா தீவு, பிரிட்டிஷ் நாட்டுக்குச் சொந்தமான இந்து சமுத்திர நிர்வாக பகுதியாகும்.
பிரிட்டிஷ் - அமெரிக்கா ஆகிய இரண்டு வல்லரசுகளின் படைகளின் இரகசிய கூட்டுப் படைத் தளம் அமைந்துள்ள அந்தத் தீவில் தஞ்சம் கோரிய முதல் வெளிநாட்டவர்கள் இந்த இலங்கைத் தமிழர்களே ஆவர்.
சுமார் 60 வரையான தமிழ் அகதிகள் அங்கு தனிமையான சூழ்நிலையில் தடுப்பு முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு வெளியுலகத் தொடர்புகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் சிலர் ருவாண்டா நாட்டில் திறக்கப்பட்ட இடைத் தங்கல் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
தனிமை, விரக்தி காரணமாக அகதிகளில் சிலர் உயிர் மாய்க்கவும் முயற்சித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.