இராணுவத்தினர் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது எம்.பி பொ. கஜேந்திரகுமார் தெரிவிப்பு

2 months ago



இராணுவத்தினர் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புலமைச் சொத்து சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீது நேற்று இடம் பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இராணுவத்தினர் யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் துரதிர்ஷ்டவசமாக தமிழர்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக இராணுவத்தினரால் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட சட்டவிரோத விகாரையை குறிப்பிடலாம்.

அப்போதைய இராணுவத் தளபதியால் விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட் டது.

அதன்போது மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவர், செயலாளர் ஆகியோரின் பங்களிப்புடன் இது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

தையிட்டியில் விகாரை கட்டப்பட்ட இடம் தனியாருக்குச் சொந்தமானது என அதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விடயம் 2024 டிசெம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டது.

அதேபோன்று 2025 ஜனவரி 31 ஆம் திகதி மீண்டும் பேசப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமை தாங்கினார்.

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் என்ற அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்தக் காணியில் தேவநம்பியதீசன் காலத்தில் விகாரை அமைக்கப்பட்டதென்றும் 14 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதென்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் எந்தவொரு காரணத்துக்காகவும் காணியை மீள கையளிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி என வெளிப்படையாகத் தெரிந்தும் இவ்வாறு நடந்து கொள்ள முடியாது.

இராணுவத்தினர் என்பதற்காக சட்டத்தை கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது - என்றார்.