பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் செ. திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார்.
கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது.
இவர் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு 10652 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெளிவாகியுள்ள ம. ஜெகதீஸ்வரன் ஆசிரிய சேவா சங்கத்தின் வடமாகாண தலைவராகவும் தேசியமட்ட உப தலைவராகவும் செயற்பட்ட நிலையில் கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஆசியர்கள் சார்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து இருந்தார்.
இவர் தற்போது 9280 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மற்றையவர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டது. ரவிகரன். இவர் பல்வேறு மக்கள் சார் போராட்டங்களில் பங்கேற்று இருந்ததோடு குருந்தூர்மலை உட்பட வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட ஒருவராக காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு தரப்பினரோடு முரண்பட்டு பல வழக்குகளையும் சந்தித்து இருக்கின்றார்.
இவர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினராகவும் செயல்பட்டிருந்தார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 11215 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இதேவேளை பழைய முகங்களாக ரிசார்ட் பதியுதீன் இம்முறை 21,018 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்த போதிலும் கடந்த முறை 28 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தார்.
இவரின் தற்போதைய வாக்கு வீதம் சரிந்து இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
கே.கே மஸ்தான் கடந்த இரண்டு தடவைகள் பாராளுமன்றத்திற்கு சென்று ராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தற்போது புதிய சின்னமாக இலங்கை தொழிலாளர் கட்சியினூடக கங்காரு சின்னத்தின் ஊடாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெளிவாக இருக்கின்றார்.
மஸ்தானை பொறுத்தவரை குறித்த கட்சியையும் சின்னத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பாரிய சிரமத்தை எதிர்கொண்ட நிலையிலும் கூட அவருடைய பிரசாரத்தின் யுக்தியின் அடிப்படையில் அவர் வெற்றி வாய்ப்பை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை 13511 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அவர் பாராளுமன்றத்துக்கு தெளிவாக இருப்பதோடு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் இதே அளவான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து செல்வம் அடைக்கலநாதன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினூடாக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்.
இவர் 25 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது மீண்டும் 5 வருட பாராளுமன்ற உறுப்புரிமையை அலங்கரிப்பதற்காக செல்கின்றார்.
எனினும் சடுதியான வாக்கு சரிவை சந்தித்து 5695 வாக்குகளைப் பெற்று இம்முறை பாராளுமன்றம் செல்லும் இவர், அகில இலங்கை ரீதியில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவானோரில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.