கடந்த 5 வருடங்களில் வீதி விபத்துக்களில் இலங்கையில் 12 ஆயிரத்து 140 மனித உயிர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிப்பு

3 days ago



கடந்த 5 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக இலங்கையில் 12 ஆயிரத்து 140 மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2020 முதல் 2024 வரையான ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹப்புகொடவின் மேற்பார்வையில் இடம்பெற்ற கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2020 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 363 பேரும், 2021ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 557 பேரும், 2022ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 540 பேரும், 2023ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 321 பேரும், 2024ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 359 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை நடந்த பேருந்து விபத்துகள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 11 மாதங்களில் 198 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

அவற்றுள் 50 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்களும், 148 தனியார் பேருந்து விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



அண்மைய பதிவுகள்