விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் இன்றாகும். அவர் எழுதிய கட்டுரை

3 weeks ago



விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

அவர் அரசியல் மதியூகி மட்டுமல்லர். தத்துவ அறிஞரும் கூட. ஆழமான தத்துவக் கட்டுரைகளை அழகு தமிழில் இலகு மொழியில் படைத்தவர்.

அதற்கு உதாரணமாக மனித வாழ்வு பற்றி "தனி மனித தத்துவம்" என்ற தலைப்பில் அவர் வரைந்த கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இன்று இங்கு பிரசுரமாகின்றது.

வாழ்வு- இந்தக் காலம் தான் மனித இருப்பின் எல்லைக் கோட்டை    இடுகிறது.

இருத்தலின் எல்லைக்கு அப்பால் இல்லாமை இருக்கிறது.

இல்லாமையை, அதாவது இருத்தலிலிருந்து இல்லாமல் போவதை, சாவு என்று சொல்கிறான் மனிதன்.

காலமும், நிலையாமையும், சாவும் மனித இருத்தலின் மெய்யுண்மைகள். இவை பற்றிய ஆழமான தரிசனத்தைத் தருகின்றனர் தத்துவவியல் அறிஞர்கள்.

இருப்பு என்பது காலத்தின்      பாதையால் நடைபெறும் பயணம். இந்தப் பயணத்தில் நான் ஒரு கணமும் தரித்து நிற்க முடியாதவாறு காலம் என்னை நகர்த்திச் செல்கிறது.

நான் காலத்தில் மிதந்து கொண்டு பயணிக்கிறேன். நடந்து முடிந்தது இறந்த காலமாகவும், நடக்கப் போவது எதிர்காலமாகவும், நடந்து கொண்டிருப்பது நிகழ்காலமாகவும் எனக்குத் தென்படுகிறது.

இறந்த காலம் செத்துப்போனாலும், எனது அனுபவத்தின் நிழலாக அது என்னை சதா பின்தொடர்கிறது.

எனது வாழ்வனுபவம் எப்பொழுதுமே நிகழ்காலமாகவே கட்டவிழ்கிறது.

எதிர்காலமானது, இறந்த காலமாக மாறும் நொடிப் பொழுதுகளாக நான் நிகழ்காலத்தை அனுபவிக்கிறேன்.

நிகழ்கால அனுபவமே நிதர்சனமானது. மெய்மையானது என்கிறார் தத்துவவியலாளர் கைடேகர்.

ஆனால் மனிதன் நிகழ்காலத்தில் வாழாமல், எதிர்காலம் பற்றியே சிந்திக்கிறான்.

மனித ஆசைகளும், எதிர்பார்ப்புகளும், திட்டங்களும், எதிர்காலத்தில்    நிறுத்தப்பட்டிருப்பதால், மனித    மனமானது எதிர்காலத்தை நோக்கியதாக, எதிர்காலத்தில் நிலைத்துப் போகிறது.

செத்துப் போன காலத்தில் புதையுண்டு போகாமலும், எதிர்காலத்தையே சதா எண்ணிக் கிடக்காமலும், நிகழ்காலத்தில் வாழ்வதுதான் அர்த்த பூர்வமானது.

காலத்தில் நிகழும் எனது பயணம் சாவுடன் முடிவடைகிறது.

நிலையற்ற இந்த உலகில், நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு.

எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது.

எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன்.

எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது.இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது.

எனது அனுபவத்தின் முடிவாக. எனது இருத்தலின் முடிவாக. நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.

என்னைச் சூழ எங்கும் சாவு      நிகழ்கிறது. மற்றவர்களது சாவை நான் நித்தமும் சந்திக்கிறேன்.

எனக்கு வேண்டியவர்கள், நான் பற்றுக் கொண்டவர்கள் மடியும் போது, துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது.

மனித இருப்பின் மிகவும் சோகமான, துன்பமான நிகழ்வாக சாவு சம்பவிக்கிறது.

எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில், சாவு எனது கதவைத் தட்டலாம்.

திடீரென, இருப்பிலிருந்து இல்லாமை என்ற சூன்யத்திற்குள் நான் தூக்கி வீசப்படலாம்.

எனது இருப்பின் நிலையாமை எனக்குத் தெரிந்தும், சாவின் நிச்சயத்துவத்தை நான் உணர்ந் தும், நான் அதுபற்றி சிந்திக்கத் துணிவதில்லை.

மனித பயங்கள் எல்லாவற்றிற்கும் மூலபயமாக, தலையான பயமாக, மரண பயம் எனது ஆழ்மனக் குகைக்குள் ஒளிந்து கிடக்கிறது.

நான் அதை அடக்கி, ஒடுக்கி, என் நனவு மனதிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறேன்.

சாவு என்பது மனித இருப்பு    நிலையின் தவிர்க்க முடியாத உண்மை என்கிறார் கைடேகர்.

அதை மறுப்பதும், அதற்கு அஞ்சுவதும், அதிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ள முயல்வதும் அபத்தமானது.

சாவின் பிடியிலிருந்து எவருமே தப்பிவிட முடியாது.

அது வாழ்வின் ஒரு நிகழ்வாக என்றோ ஒரு நாள் எதிர் கொள்ளப்பட வேண்டியது. சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும்.

அந்தத் துணிவிலும் தெளிவிலும் விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்த முள்ளதாக, நிறைவானதாக அமையும் என்கிறார் கைடேகர்.