யாழ்.தீவக அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

யாழ்ப்பாணம் - தீவகங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - தீவகங்களுக்கு இடையிலான படகுச்சேவை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கியூமெடிக்கா தொண்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக அந்தச் சேவையைக் கைவிடவுள்ளதாக மேற்படி தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளதாக நேற்று(30) நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விடயம் தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ளுமாறும், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் மாவட்டச் செயலருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தலைவர் உத்தரவிட்டார்.


தரைவழிப் போக்குவரத்து இல்லாத நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளில் வாழும் மக்களுக்கு இந்த அம்புலன்ஸ் படகுச்சேவையே பிரதான மருத்துவ மார்க்கமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.