யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் அதன் தமிழ்த்துறையின் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டை எதிர்வரும் 7, 8ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது.
இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டவை வருமாறு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன் விழா நிகழ்வு வரிசையில் சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக தமிழ்த்துறை தனது ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டை "இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை" என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கிறது.
மானுட விடுதலை தொடர்பில் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியங்களின் பங்களிப்பை பல்வேறு நோக்கு நிலைகளில் ஆய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதுமே இதன் நோக்கங்களாகும்.
தமிழியல் ஆய்வு மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கைலாசபதி கலையரங்கில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கி. விசாகரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆர்வலர்கள் முதலானோரிடமிருந்து கோரப்பட்டிருந்தன.
ஆர்வத்துடன் பலர் இம் மாநாட்டுக்கான சுட்டுரைகளை அனுப்பி வைத்திருந்தனர். இந்தியா, டென்மார்க் முதலான நாடுகளில் இருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
கிடைக்கப் பெற்ற நாற்பத்தெட்டு (48) ஆய்வுக்கட்டுரைகளும் உரிய முறைப்படுத்தலூடாக துறைசார் நிபுணத்துவம் உடையவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.
அவற்றுள் மதிப்பீட்டாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முப்பத்தெட்டு (38) ஆய்வுக்கட்டுரைகள் மட்டும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியர். சு. வித்தியானந்தன் அரங்கு, இலங்கையர்கோன் அரங்கு. மகாகவி அரங்கு, டானியல் அரங்கு என நான்கு அரங்குகளில் அளிக்கை செய்யப்படவுள்ளன.
ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் பல்வேறு புலங்களில் கோலோச்சி வருகின்ற புலமையாளர்கள் சிலரை இனங்கண்டு, அவர்கள் இம்மாநாட்டில். கௌரவிக்கப்படவுள்ளனர்.
உயராளுமைக்கான கௌரவத்தை பேராயர். வண. கலாநிதி. எஸ். ஜெபநேசன், படைப்பாளுமைக்கான கௌரவத்தை மூத்த மரபுக் கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப), மூத்த எழுத்தாளருக்கான கௌரவங்களை குந்தவை (இரா. சடாச்சரதேவி). அ. யேசுராசா. ஐ. சாந்தன் ஆகியோரும் பெறவுள்ளனர்.
தமிழ்மொழி மீதான ஈடுபாட்டையும் இலக்கியப் பரிச்சயத்தையும் பரவலடையச் செய்யும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் உள்ளிட்ட பிற பீட மாணவர்களிடையே தமிழறிவுப் போட்டிப் பரீட்சையையும், வடக்கு மாகாணத்தின் 12 வலயங்களிலுள்ள பாடசாலைகளின் உயர்தர வகுப்பு மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, தமிழறிவுப் போட்டிகளையும் இம்மாநாட்டின் இணை நிகழ்வுகளாக முன்னெடுத்துள்ளோம்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் கலைப் பீடமும் அப்பீடத்தின் ஓர் அங்கமாகிய தமிழ்த்துறையும் தமது ஐம்பதாவது ஆண்டுகளை நடப்பாண்டில் நிறைவு செய்துள்ளன.
அவ்வகையில் இவற்றின் பொன்விழா கொண்டாட்ட வரிசையில், இரண்டாம் நாள் நிகழ்வை "முப்பெரும் விழா" என்ற தலைப்பில் சுவிதா நிகழ்வு, நடன அரங்கு, தமிழிசை அரங்கு. கூத்து அரங்கு என்றவாறாக ஒழுங்கமைத் துள்ளோம்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அமரர். பேராசிரி யர். சு. வித்தியானந்தன் ஈழத்தின் பாரம்பரியக் கூத்துக்களை மீட்டுருவாக்கம் செய்வதில் மிகுந்த அக்கறை உடையவராக விளங்கினார்.
அவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் யாழ்ப்பாணப் பிரதேசங்களில் இன்றும் உயிர்த்துடிப்புடன் வழங்கி வருகின்ற ஈழத்தின் தென்மோடிக்கூத்தின் செழுமையை வெளிக்கொணரும் வகையில் "காத்தான் கூத்து" இம்முறை இங்கு மீளவும் மேடையேற்றப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இந்த மாநாட்டையொட்டி தமிழியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகம் பயனுறும் வகையில் பிரபல பதிப்பகங்களின் புத்தகக் கண்காட்சிக்கும் புத்தக விற்ப னைக்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கணிசமான விலைக்கழிவில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிவரும் நூல்களை இக்காலப் பகுதியில் கொள்வளவு செய்துகொள்ளலாம்.
இம்மாநாட்டுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை வழமை போன்று "சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசு அறக்கொடை நிதியம்" வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும் - என்றுள்ளது.