பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் பேரணி

1 month ago



பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் இருந்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் ஐவர் உயிரிழந்தனர். இதனால் கலவரம் வெடித்தது.

ஊடகத் தகவலின்படி போராட்டக்காரர்களால் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிரடிப் படையைச் சேர்ந்த நால்வர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்தப் பேரணியில் பலர் காயமடைந்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள்  பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்தனர்.

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வழங்கும் பரிசுகள் எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும்.

அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான்கான் பிரதமராக இருந்த போது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணை வழங்கியது.

பிணை கிடைத்த சில மணி நேரத்தில் தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான்கானை ராவல்பிண்டி பொலிஸார் கைது செய்தனர்.

ராவல் பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான்கான் இருந்த போது, கடந்த செப்ரெம்பர் 28ஆம் திகதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தான் இம்ரான்கான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

லாகூர், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் இம்ரான் கான் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாகாணத்தில் அவர் மீது 54 வழக்குகள் உள்ளன.

அனைத்து வழக்குகளிலும் இருந்தும் இம்ரான்கானுக்கு பிணை வழங்க வேண்டும் என்று இம்ரான் கானின் சகோதரி நூரின் நியாசி தாக்கல் செய்த மனுவை லாகூர்    நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் இம்ரான்கான் இப்போது விடுதலையாவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இந்த நிலையிலேயே அவரின் விடுதலையை வலியுறுத்தி          பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட் டது. 


அண்மைய பதிவுகள்