யாழ்.சுழிபுரம் புளியந்துறை முதல் திருவடிநிலை கடற்கரைப் பகுதி வரை அமைக்கப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமான நடவடிக்கைகளால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கரையோர பாதுகாப்புத் திணைக்களம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுழிபுரம் பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கானை பிரதேச விவசாய குழு கூட்டம் பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தலைமையில் நேற்று இடம்பெற்றபோதே அவர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
வேறு பிரதேசத்தவர்களால் கடற்கரையோரக் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு சட்டரீதியற்ற முறையில் எல்லைகள் இடப்பட்டு தனியார் சுற்றுலாத்துறை சார் நிலையமொன்று அமைக்கப்படுகின்றது.
காலம் காலமாக இந்தப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கை இந்தச் செயற்பாட்டால் பாதிக்கப்படுகின்றது - என்றனர்.
இது குறித்து பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் இது தொடர்பாக உடனடியாகக் கவனம் செலுத்தி மீனவர்களினுடைய இயல்புநிலையைப் பேண வேண்டும்- என்றார்.