பொத்துவில் மக்களின் சுமார் 600 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டால் விடுவிக்கப்பட்டன.
பொத்துவில் மக்களின் சுமார் 600 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டால் விடுவிக்கப்பட்டன.
பொத்துவில் கோமாரி பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கைக்கு வனப் பரிபாலனத் திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் சுமார் 600 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனால் பொத்துவில் கோமாரி காட்டுமடு, டிப்போமடு, பூனாப்பொக்கணி போன்ற பிரதேசங்களில் மிளகாய், வெண்டிக்காய், கத்தரி, தக்காளி, சோளம் போன்ற சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சுமார் 400 தமிழ்க் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.
அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் காணி விடுவிப்பை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கும் உறுதுணையாக இருந்த பொதுமக்கள் பாதுகாப்புச் சபையின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கும் காணி விடுவிப்புக்கு முன்னின்று செயல்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் பார்த்திபன் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்வில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த பிரதேசங்களில் வழமையாக சேனைப் பயிர்ச்செய்கை நடைபெற்று வருவதுண்டு.
ஆனால், இம்முறை அதனை பொத்துவில் பிரதேச செயலகம் முறையாக அடையாளப்படுத்தாத காரணத்தால் வனப் பரிபாலனத் திணைக்களம் தடை விதித் திருந்தது.
கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகள் தலையில் கை வைத்துக் கொண்டு மிகவும் விரக்தியில் வேதனையுடன் இருந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்புச் செயலணியின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு உரிய ஆதாரத்துடன் முறையிட்டேன்.
மறுநாளே அதற்குரிய விடுவிப்புக் கட்டளை வந்தது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சபையின் செயலாளர் ரவி செனவிரத்ன நேரடியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து இந்தக் காணிகள் ஏழை தமிழ் விவசாயிகளுக்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
அதனால் அந்த விவசாயிகள் நேற்று முதல் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்காக அங்கு சென்று உழவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்- என்றார்.