புளொட் -- ஈ.பி.ஆர்.எல்.எவ்--ஈ.பி.டி.பி. இயக்கங்கள் செய்த படுகொலைகளுக்கு நீதி வேண்டும்.-- தியாகராஜா பிரகாஷ் கோரிக்கை

2 months ago



இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரை இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அரச ஒட்டுக்குழுக்கள் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு, அவர்கள் பயந்து நடுங்கிய தமிழ் இயக்கங்கள் படுகொலை செய்தன.

தங்களுக்கு உள்ளேயே          கொலைகாரர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கோரி நிற்க முடியும்? 

எனவே. புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி. இயக்கங்கள் செய்த படுகொலைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமையாகும்.

அதற்கு இந்த ஆயுதக் குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதி என்ற உயரிய பசுத்தோல் போர்க்காமல் இருப்பது தமிழ் மக்களின் இன்றைய கடமையாகும்."

இவ்வாறு காட்டத்துடன் தெரிவித் தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா பிரகாஷ்.

உடுவிலில் நடைபெற்ற மக்கள்       சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

"புளொட் இயக்கம் 2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கும் வரை                  இராணுவத்தினருடன் நேரடியாக இணைந்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை மேற்கொண்டிருந்தது என்பது காலி முகத்திடடலில் நடைபெற்ற இலங்கை இராணுவத்தின் வெற்றி விழாவில் புளொட் தலைவர் சித்தார்த்தனே பெருமையாக அதை ஒப்புக்கொண்டார்.

யாழ். நகரில் புளொட் இயக்கம் செய்த கோரக்கொலைகளில் ஒன்று கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இராசரத்தினம் இராஜேஸ்வரன் என்ற இளைஞரை 1999ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கடத்திச்சென்று அந்த இளைஞரை சித்திரவதை செய்து அவரின் தலையை வெட்டி யாழ். வைத்தியசாலை வீதியில் போட்ட சம்பவம் முக்கியமானதாகும்.

யாழ். நகரில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த இராஜேஸ்வரன் என்ற இளைஞர் வேலை முடிந்து கரவெட்டிக்கு சென்றுகொண்டிருந்த போது காணாமல் போனார்.

அந்த இளைஞரைக் கடத்திச் சென்ற புளொட் இயக்கத்தினர் நெல்லியடியில் உள்ள புளொட் முகாமில் வைத்து சித்திரவதை செய்தனர்.

இரண்டு நாள்கள் வைத்து சித்திரவதை செய்த பின் அந்த இளைஞரின் தலையை வெட்டி எடுத்து சென்று யாழ். வைத்தியசாலை வீதியில் போட்டனர்.

23 ஆம் திகதி அதிகாலை உடல் இல்லாத தலை மீட்கப்பட்டது.          சித்திரவதை செய்து படுகொலை செய்வதில் பிரசித்தி பெற்ற புளொட் இயக்கத்தினர் யாழ். நகர மக்களுக்கு அச்சத்தை உருவாக்கும் வகையிலேயே தலையை யாழ். நகரில் போட்டனர் என அக்காலப் பகுதியில் பலரும் பேசிக்கொண்டனர்.

பின்னர் அத்தலைக்கு உரிய உடல் புளொட் இயக்கத்தின் நெல்லியடி அலுவலக மலசல கூட குழியிலிருந்து மீட்கப்பட்டது.

அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட போதிலும் புளொட் இயக்கம் அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய காரணத்தால் அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

இந்தக் கொலையின் மூலம் யாழ். நகர மக்களை அச்சத்தில் வைத்திருக்கலாம். பயமுறுத்தி வைத்திருக்கலாம் என எண்ணிய புளொட் இயக்கத்திற்கு அது தோல்வியாகவே அமைந்தது.

இந்தக் கொலை உட்பட யாழ். நகரில் அக்காலப் பகுதியில் புளொட் இயக்கம் செய்த கொலைகளால் யாழ். குடாநாட்டில் புளொட் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

யாழ். குடாநாட்டில் புளொட் இயக் கத்தை மக்கள் வெறுத்து ஒதுக்கியதால் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறி வவுனியாவில் நிலை கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அதேபோன்று வவுனியாவில் மாணிக்கதாசன், அலவாங்குதாசன் தலைமையிலான புளொட் கொலைக்குழு கடத்தல் கப்பம் பெறுதல், பாலியல் பலாத்காரம், படுகொலை என அவர்கள் செய்த அட்டூழியங்களின் பட்டியல் மிக நீளமானவை.

அதேபோன்று மட்டக்களப்பில் புளொட் இயக்கம் செய்த படுகொலைகள், அட்டூழியங்கள் எண்ணில் அடங்கா.

2004ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட புளொட் மோகன் செய்த படுகொலைகளின் பட்டியலை வடக்கு, கிழக்கில்    காணாமல்போனோர் பற்றி விசாரித்த நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் விவரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக அகதி  முகாமில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி 158 பொதுமக்களைக் கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்தில் புளொட் மோகன் முக்கியமானவர் என நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத் துக்குப் பின்னர் அப்பாவி பொதுமக்களை பிடித்து மட்டக்களப்பில் வீதிகளில்            உயிருடன் ரயர் போட்டு எரித்த சம்பவங்களை தினசரி அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைகளை கப்டன் முனாசுடன் சேர்ந்து புளொட் மோகனும் ஏனைய புளொட் இயக்கத்தினருமே செய்தனர்.

இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத வவுணதீவு பகுதியில் மறைந்திருந்து பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவங்களால் மக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டனர்.

1988ஆம் ஆண்டு புளொட் மோகன் தலைமையிலான புளொட் இயக்கத்தினர் கல்லடி பாலத்துக்கு அருகில் வைத்து வீரகேசரி மட்டக்களப்பு செய்தியாளர் ஆர்.நித்தியானந்தனை பிடித்து கழுத்தை அறுத்து விட்டுச் சென்றனர்.

நித்தியானந்தன் இறந்து விட்டார் என நினைத்தே புளொட் இயக்கத்தினர் சென்றனர்.

ஆனால் அவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு              வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர்              காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்னர் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு புளொட் மோகன் சுட்டுக்கொன்றார்.

புளொட் இயக்கத்தின் அலுவலகம் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இருந்தது.

படுவான்கரை கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வரும் மக்கள் புளொட் அலுவலகம் இருக்கும் வீதியால் செல்லவே அச்சம்        அடைவார்கள்.

படுவான்கரையில் இருந்து விறகு கொண்டு வந்து விற்று விட்டு 300ரூபா பணத்துடன் சென்ற ஓர் ஏழைத்தொழிலாளியை கூட புளொட் இயக்கத்தினர் 300 ரூபாவுக்காகக் கடத்தி கொலை செய்த சம்பவமும் உண்டு.

ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கனடா செல்வதற்கு அந்த நாடு தடை செய்திருக்கின்றது.

இதற்குக் காரணம் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் படுகொலைகளில் ஈடுபட்டதாக கனடா அரசுக்கு ஆதாரம் கிடைத்ததால் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கனடா அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

இதில் முக்கியமான சம்பவம்          முரசொலி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திருச்செல்வத்தின் மகன் அகிலன் என்ற மாணவனை சித்திரவதை செய்து கொன்றதாகும்.

அந்தக் காலப் பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தில் மண்டையன்குழு என்ற கொலைப்படை இயங்கி வந்தது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கியது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோகோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

அந்தச் செய்தி முரசொலி  பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது.

அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த இளைஞரைக் கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும்த் தெரியவந்தது.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்குத் திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள். புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர்          ஈ.பி. ஆர்.எல்.எவ். இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

திருச்செல்வத்தையும் கடத்திக் கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வத்தைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்றபோது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார்.

அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர்.

திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர்.

தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திர வதைக்கு உள்ளாக்கியது.

அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள்.

அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள்.

மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனேடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது.

திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார்.

அதனால் சுரேஷ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா.

அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன.

ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன.

அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் 'ஏ' பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார்.

தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கெட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினார்.

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒருபோதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை.

தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்னாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர், எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறு மூலையில் பிறந்த         வணசிங்க 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த வணசிங்க, இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத் தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.

அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கின்றதோ அங்கு சென்று  அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள், படுகொலைகளைத் தட்டிக் கேட்டார்.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் இவரைப் படுகொலை செய்ய    திட்டமிட்டது.

1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்கத்தைச் சேர்ந்த இருவர் அங்கு சென்றனர்.

அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வண பிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வண. பிதா சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதே தேவாலயத்துக்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வண.பிதா சந்திரா, மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல.

ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லிம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல். எவ் இயக்கத்தினர் கடத்திச் சென்றனர்.

இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

வண.பிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார்.

ஆனால், ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துவிட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார்.

இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல். எவ் இயக்கம் வணபிதா சந்திராவைப் படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989 ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் சுட்டுக் கொன்றது.

யாழ்ப்பாணம் - அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கிச் சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக் களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மக்களின் குரலாக ஒலித்த மக்கள் தலைவர்களைப் படுகொலை செய்த சம்பவங்கள் இலகுவில் மறந்து விடக் கூடியவை அல்ல.

அந்த கொலைகளைப் புரிந்தவர்கள் அதற்கு உத்தரவிட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

ஈ.பி.டி.பி. சந்திரிகா அரசு காலத்திலும் அதன்பின் மஹிந்த அரசுக் காலத்திலும் செய்த கொலைகள் ஏராளம்.

நாரந்தனையில் பிரசாரத்துக்காக சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.

ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல், ஊடகவியலாளர்களான நிமலராஜன், ரஜிவர்மன் படுகொலை என்று நீண்டுகொண்டே செல்கின்றது.

இவை அனைத்தும் முறையாக விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

தற்போது அநுர அரசால் சிவராம் என்று போற்றப்பட்ட 'தராகி' சிவராம் படுகொலை விசாரனை துரிதப்படுத் தப்பட்டுள்ளது.

அதனை நாம் வரவேற்கின்றோம். சர்வதேச விசாரனையை நாம் கோருவதற்கு முன், எம்முள்ளே பசுத் தோல் போர்த்தவர்களை முதலில் களையவேண்டும்.

இந்தத் தேர்தலில் மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் சரியான நீதி கிடைக்க நாம் பாடுபடுவோம்.

எமது குரல்கள் நாடாளுமன்றில் ஒலிக்க நீங்கள் ஏகோபித்த ஆணையை வழங்க வேண்டும்.

இந்தக் கொலைகாரர்களை நீங்கள் நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் நாம் அவர்களுக்கு முறையான தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும்.

மாறாக நீங்கள் அவர்களை மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்வீர்களானால் அவர்கள் தம்மைக் காப்பதற்காக நாடாளுமன்றில் பெரும்பான்மைக்காக தளம்பும் அநுர அரசுடன் தம்மைக் காப்பதற்காக இலகுவில் விலைபோய்விடுவார்கள்.

பிறகு இவர்கள் செய்த கொலைக்கான நீதி கிடைக்காமலே செல்லலாம்." என்றார்.

அண்மைய பதிவுகள்