தமிழர் காணிகள் விடுவிப்பில் இணக்கப்பாடு எட்டவில்லை - ரணிலின் வாக்குறுதி காற்றில் விடப்பட்டன
வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்களில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாகப் புதிதாக காணிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதிலேயே சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அக்கறை காண்பிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் பின்னர் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் வயற்காணிகள், வீட்டுக்காணிகளை ஆக்கிரமித்து வர்த்தமானியில் வெளியிட்டுள்ளன.
இந்தக் காணிகளை விடுவிக்குமாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 1985 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் ஆளுகைக்குள் இருந்த நிலைமையைப் பேணிக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திரும்பத் திரும்ப அறிவிப்பு விடுத்து வருகின்றார்.
ஆனால், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன அது தொடர்பில் எதிர்மாறாகவே செயற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் ஜனாதிபதியின் செயலர் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரும், துறைசார் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் வன வளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வடக்கின் மாவட்டச் செயலர்களும், மேலதிக மாவட்டச் செயலர்களும் பங்கேற்றனர்.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் விடுவிக்கக்கோரிய காணியின் அளவை வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன விடுவிக்கவில்லை என்பதை மாவட்டச் செயலர்களும் மேலதிக மாவட்டச் செயலர்களும் சுட்டிக்காட்டினர்.
அதைவிட புதிதாகக் காணிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினர்.
கோரிக்கை விடும் காணிகளை விடுவிப்பதற்கு சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை தேவை என வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகங்கள் தெரிவித்ததுடன், அந்தக் காணிகளை விடுவிப்பதற்கான இணக்கத்தையும் வெளிப்படுத்தாமல் இழுத்தடித்தனர்.
இதனால் நேற்றைய கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளை, இது தொடர்பில் மீண்டும் கூடி ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.