தடுப்பூசிகள் கொள்வனவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்

7 months ago

பக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெரொபெனம் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் அவசர கொள்முதல் முறையின் மூலம் 4 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டன.

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

மெரொபெனம் தடுப்பூசி கொள்வனவு மூலம் நாட்டுக்கு 36 கோடியே 89 இலட்சத்து 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு குப்பி 1075. 68 ரூபாய்க்கு கிடைத்தும் 1895, 50 ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளனர்

தேவையான அளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் ஏன் அவசர கொள்முதல் மேற்கொள்ளப்பட்டது என்பது பிரச்னைக்குரிய விடயமாகும்.

இதனால், நாடு நஷ்டத்தை சந்தித்துள்ளது.

எனவே, இந்த அவசர கொள்முதல் தொடர்பாக முறையான அறிக்கையை வெளியிட்டு விளக்கமளிக்க வேண்டும். 

அத்துடன், இந்தத் தடுப்பூசி விநியோகஸ்தர் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையத்திடமிருந்து பதிவுச் சான்றிதழைப் பெற்று, குறுகிய காலத்துக்குள் அவசர கொள்முதல் மூலம் இந்த மோசடியை செய்திருப்பதால், இது தொடர்பாக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.