ஜனாதிபதித் தேர்தல் காலம் நெருங்கும் நிலையில், இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஜெய்சங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டதோடு, இந்தச் செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்யவிருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொடுக்கும் இந்தியாவின் கொள்கை குறித்தும் இந்தச் சந்திப்பில் கருத்துப் பரிமாறப்பட்டன.
இந்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட இருக்கும் கைத்தொழில் வலயம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டதோடு பல இந்திய முதலீட்டாளர்கள் அங்கு தமது முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இந்தத் தொழில் வலயத்தில் ஏனைய நாடுகளின் முதலீட்டாளரையும் முதலீடு செய்வதற்கு இணைத்து கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய பொருளாதார மாற்றச்சட்டத்தின் மூலம், சுகாதார கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்ட வரைவு எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் செயற்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையா டப்பட்டதுடன் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் விரைவான தீர்மானத்தை எட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
தோட்டலயன் அறைகள், தோட்டக்கிராமங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் எனவும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தலையீட்டின் மூலம் அந்தந்த கிராமங்களை அபிவிருத்தி செய்யமுடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாகவும் ஜனாதிபதி ரணில் இதன்போது சுட்டிக்காட்டினார்.