இந்தியப் பிரதமர் ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ள நிலையில், சம்பூர் சூரியமின் உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான விழாவிலும் கலந்துகொள்வார்

1 month ago



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ள நிலையில், சம்பூர் சூரியமின் உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான ஆரம்ப விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையும், இந்தியாவும் கைச்சாத்திட்டிருந்தன.

இலங்கை மின்சார சபைக்கும், இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

ஆயினும் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தாமதமாகியிருந்து.

இந்தத் திட்டத்துக்கு கடந்த காலங்களில் ஜே.வி.பி.யும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சம்பூர் மின் உற்பத்தி நிலையத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது.

சர்ச்சைகளைத் தோற்றுவித்த சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு மாற்றீடாகவே இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் முதற்கட்டம் மூலம் 50 மெகாவோட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யவும், இரண்டாவது கட்டத்தில் 70 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.




அண்மைய பதிவுகள்