தலைமன்னார் இராமேஸ்வரம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் தலைமன்னார் இராமேஸ்வரம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் நோக்கில் தமிழ் நாடு கடல்சார் வாரிய தலைமைச் செயல் அலுவலர் மா.வள்ளலார் தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை தலைமன்னார்- தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து 1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகள் நடைபெற்று வந்த கடல் பயணம் 1964 இல் அடித்த கோரப் புயலில் தனுஷ்கோடி நிலை குலைந்ததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து இலங்கை உள்நாட்டு போர் காரணமாக சில ஆண்டுகளில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இலங்கை- இந்தியா இடையே கப்பல் பயணத்தை மீண்டும் தொடங்க இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2022 ஆம் ஆண்டு பச்சை கொடி காட்டியது.
குறிப்பாக நாகை- காங்கேசன்துறை மற்றும் இராமேஸ்வரம்-தலைமன்னார் இடையேயான கப்பல் பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் இந்திய தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கை துறைமுகம். கப்பல் மற்றும் விமான சேவைத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலாடி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமன்னார் முனையத்தை மேம்படுத்துவது. தலைமன்னார் தனுஷ்கோடி இடையே ஆன்மீக சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் தமிழ் நாட்டின் பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக தமிழ்நாடு இராமேஸ்வரம் தீவில் ஆய்வு மேற்கொண்டு இந்திய மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 14 ஆம் திகதி காங்கேசன்துறை-நாகை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இலங்கை இந்திய அரசுகளால் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவின் தமிழக அரசு சார்பில் இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் தலைமன்னார், இராமேஸ்வரம் - காங்கேசன்துறை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்குவதற்கு இராமேஸ்வரத்தில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிவரவு பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் இந்திய மத்திய அரசின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து கடந்த செப்ரெம்பர் மாதத்தில் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு கடலுக்கு அடியிலும், கரையிலும் மண்ணின் தரம் குறித்து நான்கு இடங்களில் ஆய்வு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அலுவலர் மா.வள்ளலாளர் ஐ.ஏ.எஸ். தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தீவின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான இடங்கள் குறித்து இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் ஆய்வு செய்த பகுதிகள், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறை முகம், தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர். தலைமைச் செயல் அலுவலர் மா.வள்ளலாளர் ஐ.ஏ.எஸ். ஆய்வுக்கு பின் ஊடகங்களுக்குப் பதிலளிக்கையில்,
இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை விரைந்து ஆரம்பிப்பதற்குப் பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீன்பிடித் தொழில் மற்றும் கடல் வளம் பாதுகாப்புக்கு ஏற்றவாறு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமையும்.
முதல் கட்டமாக இராமேஸ்வரம் தலைமன்னார் இடையே 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் இயக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக உள்ளூர் சுற்றுலா தளங்களான அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்து கால், குருசடை தீவு, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை படகில் சுற்றி பார்வையிடும் வகையில் படகு சவாரி ஆரம்பிக்கும் திட்டமும் உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.- என்றார்.