இந்துக்களின் கதிர்காம பாதயாத்திரையை முடக்க முயற்சி

6 months ago

வடக்கு - கிழக்கு இந்து மக்களின் பாதயாத்திரையை முடக்கும் நோக்கில் கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை திறப்பது திட்டமிட்டு தாமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதேநேரம், கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை திறப்பு தினம் தொடர்பான குழப்பத்தை தீர்த்து வைக்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆலயத்தின் பெருந் திருவிழா கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில், பாரம்பரியமாக தொடரும் தொண்டை மானாறு சந்திதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் ஆலயத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இவர்கள் முன்னைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதைகளேயே இதற்கு பயன்படுத்துவது வழக்கம்.

பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக அம்பாறையின் உகந்தைமலை காட்டுப் பாதை திருவிழா காலத்தில் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இம்முறை காட்டுப் பாதை திறப்பதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.

மொனராகலையில் நடைபெற்ற கூட்டத்தில் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், முன்னர், இம்மாதம் 30ஆம் திகதி என்றும் பின்னர் ஜூலை 1ஆம் திகதி எனவும் அதன் பின்னர் ஜூலை 2ஆம் திகதி என்றும் அறிவிக்கப்பட்டன.

இறுதியாக ஜூலை 2ஆம் திகதி காட்டுப் பாதை திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது இந்து பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 80 கிலோமீற்றருக்கும் அதிகமான காட்டுப் பாதையை அனைவராலும் 4 நாட்களில் கடந்துவிட முடியாது.

எனவே, ஜூலை 2ஆம் திகதிக்கு முன்னராகவே காட்டுப்பாதை திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் கூறுகையில், காட்டுப் பாதையை ஜூலை 2ஆம் திகதி திறப்பது என்பது தொடர்பான முடிவு வடக்கு - கிழக்கு மாகாணத்தில் இருந்து செல்லும் பாதயாத்திரை குழுவினருக்கு அறவே பொருந்தாது.

4 நாட்களுக்குள் கொடியேற்றத்துக்கு செல்ல முடியாது. காட்டுப் பாதை திறந்து வைக்கப்படுகின்ற கால அவகாசமும் போதாமல் இருக்கின்றது.

இந்தப் பாரம்பரிய புனித யாத்திரையை முடக்கத் திட்டமிடப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகின்றது.

எனவே, இந்தப் புனித பாதயாத்திரை பாரம்பரியமாக நிலைத்து பேணப்படும் வகையில் முறையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இது விடயத்தில் ஜனாதிபதி, கிழக்கு ஆளுநரின் தலையீட்டை கோரி கடிதம் எழுதியுள்ளேன் என்றும் கூறினார்.