'ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, அரசியல் இருப்பினைத்தக்க வைத்துக் கொள்ளும் சூழ்ச்சியாக வடக்குக் கடலில் மீண்டும் சீன நாட்டு கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன' என்று வடமாகாண மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடலட்டைப் பண்ணைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடின் எதிர்வரும் நாள்களில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் என்றும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக சீன நாட்டு கடலட்டைப் பண்ணைகளை ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து அரசாங்கத் தரப்பில் இருந்து அரசியல் காரணங்களுக்காக மீண்டும் அமைப்பதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
யாழ்.மாவட்டத்தின் ஆழமற்ற பரவைக் கடற்பரப்பில் சீன கடலட்டைப் பண்ணைகள் விதைக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24ஆம் திகதி வடக்குக்கு மீண்டும் விஜயம் மேற்கொள்ள இருப்பதாக அறிகின்றோம்.
ஜனாதிபதி அவர்களே, உங்களுடைய தேர்தல் அல்லது அரசியல் இருப்புக்காக கடற்றொழில் சமூகமாகிய எங்களையும் எங்களது கடலையும் நீங்கள் அழிக்காதீர்கள்.
அரசியல் ஆதாயத்துக்காகக் குறிப்பிட்ட கடற்றொழில் சமூகத்தைத் தூண்டிவிட்டு சீன நாட்டுக்கடலட்டைப் பண்ணைகளை வடக்குக் கடலில் மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஈடுபட்டு வருக்கின்றமையை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
எமது எதிர்ப்பினையும் மீறி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் கடந்த காலத்தைவிட, தீவிரமாக கடற்றொழில் சமூகம் அதற்கு எதிராகப் போராடும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வடக்கின் அபிவிருத்திக்கோ, முதலீட்டுக்கோ நாங்கள் தடையானவர்கள் அல்ல.
ஆனால், உங்களுடைய (ரணிலின்) ஆட்சிக்காலத்தில்தான் வடக்குக் கடலிலே சட்டவிரோதமான செயற்பாடுகளும் முறையற்ற முதலீடுகளும் நடைபெறுகின்றன.
குறிப்பாக ஜனாதிபதிக்குக் கீழே செயற்படுகின்ற நாரா மற்றும் நெக்ரா நிறுவனங்கள் வடக்குக் கடலில் எத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றன? ஆய்வுகளின் அடிப்படையில்தான் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக பரீட்சார்த்தமாக அல்லது தழுவல் என்ற அடிப்படையிலேயே ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படாமல் இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.