யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என அங்கு கடமையில் இருந்த சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் செய்தி ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் 0212263227 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இல்லை என்றால் ஒரு அவசர முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என வினவியவேளை, அவர்கள் நாளையதினம் தான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என அசமந்தமாக பதிலளித்தார்.
தமிழ் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில், தமிழ் பேசத் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 24 மணிநேரமும் கடமையில் இருப்பது கட்டாயமாகும்.
சிங்களம் தெரியாத ஒருவர் ஒரு அவசர விடயம் குறித்து பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யவோ அல்லது வேறு விடயங்களுக்கோ பொலிஸ் நிலையத்துக்கு செல்லும்போது, தமிழ் பேசத் தெரியாத பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருக்கும் போது தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடமை நேரங்களை அட்டவணையிடும் போது இந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகவுள்ளது.