2025 ஆம் ஆண்டுத் திட்டங்கள் ஒக்ரோபருக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும்.-- வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு

2 months ago


2025 ஆம் ஆண்டுத் திட்டங்கள் ஒக்ரோபருக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும்.-- வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு


2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்திய வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என மீளவும் தெரிவித்தார். 

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை (22.01.2025) இடம்பெற்றது.

பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய நிதி ஆணைக்குழுவால் 2025ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வாக்குப் பணக் கணக்கு (vote on account) அடிப்படையிலும், வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தின் அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாகாண குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியாக 6,025 மில்லியன் ரூபாவும் அதில் வாக்குப் பணக் கணக்காக 2,410 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியாக 575 மில்லியன் ரூபாவும் அதில் வாக்குப் பணக் கணக்காக 230 மில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு (GEM) ஆண்டுக்குரிய மொத்த நிதியான 220 மில்லியன் ரூபாவும் வாக்குப் பணக் கணக்கிலேயே வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கு 360 மில்லியன் ரூபாவும் வாக்குப் பணக் கணக்கிலேயே வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபையால் பராமரிக்கப்படும் அதனது சொத்துக்களுக்காக 2,585 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வாக்குப் பணக் கணக்கில் 820 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபாசுதன் தெரிவித்தார். 

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தயாரிக்கும் போது தேசிய நிதி ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை கவனத்தில் கொள்ளுமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஆரம்பித்த தொடர் வேலைகளை முடிவுறுத்தல் மற்றும் முடிவுற்ற வேலைகளுக்கான கைவசம் உள்ள பற்றுச்சீட்டுக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை முன்னுரிமைப்படுத்துமாறு தேசிய நிதி ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதையும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் சுட்டிக்காட்டினார். 

இந்த ஆண்டு மாகாணத்தின் வேலைத் திட்டங்களை உரிய காலப் பகுதிக்குள் முடிவுறுத்துவதற்கு ஏதுவாக கட்டடங்கள் திணைக்களத்துக்கு முற்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பிரதம செயலர், ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். 

கடந்த ஆண்டு வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

இதன்போது கடந்த ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டின் 60 சதவீதமே கட்டுநிதியாக வழங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஓகஸ்ட் மாதமளவிலேயே அது 80 சதவீதமாக திடீரென அதிகரிக்கப்பட்டமையால் சில வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகளால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் திட்டங்களுக்கான அனுமதிகளை முற்கூட்டியே பெற்று விரைவாக அதனைச் செயற்படுத்தி முடிக்கவேண்டும் என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்ட ஆளுநர் ஒக்ரோபர் மாதத்துக்கு அவை நிறைவு செய்யப்படுவதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

சில திட்டங்கள் பெயரளவில் உள்வாங்கப்படுவதை தவிர்த்து நடைமுறைப்படுத்தக் கூடிய, மக்களுக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களை தயாரிக்குமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

மாகாண நிர்வாகத்தால் பராமரிக்க முடியாத கட்டுமானங்கள், திட்டங்களை தயாரிப்பதைவிடுத்து அதை பொதுமக்கள் - தனியார் கூட்டு இணைவு மூலம் செயற்படுத்தக் கூடியதாக மாற்றியமைக்குமாறும் ஆளுநர் அறிவுரை வழங்கினார். 

விவசாயத்துறையைப் பொறுத்த வரையில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் வழங்குவது மாத்திரமல்லாது அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்பையும், சந்தை விலையையும் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். 

அதேவேளை, குத்தகைக்கு வயல் நிலங்களை வழங்கிய காணி உரிமையாளர்கள் உரமானியம் மற்றும் பயிரழிவு இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வடக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் சுட்டிக்காட்டினார்.

அதனை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருந்தால் அதைச் சொல்லிக் கொண்டு தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது எனவும் உடனடியாக இந்த அரசாங்கத்தின் காலத்தில் அவை களையப்பட வேண்டும் எனவும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். 

மேலும் வடக்கு மாகாணத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.