இலங்கையில் தந்தையும் மகனும் இணைந்து செய்த மோசடியால் தனியார் வங்கி ஒன்று மூடப்படும் அபாயம்
இலங்கையில் தந்தையும் மகனும் இணைந்து செய்த மோசடியினால் தனியார் வங்கி ஒன்று மூடப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தின் முழுமையான செய்தியில்-
இலங்கையில் அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பல பில்லியன் ரூபா சுங்க வரி மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி காரணமாக தனியார் வங்கி ஒன்று ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தின் உரிமையாளரான தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து மூன்று பில்லியன் ரூபா மோசடி செய்ததன் காரணமாக, இந்த தனியார் வங்கி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த மகன், தவறான நிதிப் பதிவேடுகளைக் காட்டி, வங்கிக் கடன் ஒன்றின் ஊடாக 2.4 பில்லியன் ரூபாவுக்கு பிரித்தானியாவில் வங்குரோத்தான நிறுவனம் ஒன்றை வாங்கியதுடன், அந்த நிறுவனத்திடம் கடனைத் தவிர வேறு சொத்துக்கள் எதுவும் இல்லை என பின்னர் தெரிய. வந்துள்ளது.
தந்தையும் மகனும் நிறுவனப் பணியாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும், இருவரும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனத்தின் மொத்த மாதாந்த வருமானத்தை விட கடன் வட்டி அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான மூன்று பில்லியன் வாராக் கடனாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவும், இது இடம்பெற்றால் இந்த தனியார் வங்கிக்கு பாரிய நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகும்.
இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் தங்களது பணி விலகல் கடிதத்தை தற்போது கையளித்துள்ளதாகவும் தெரிய வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.