கிளிநொச்சியில் பிரபாகரனுக்கு அடுத்த கட்டம் குறித்து சிந்திப்பதற்கு கால அவகாசம் இல்லாது ஏற்பட்டிருந்த நிலைமையே ரணிலுக்கும்
கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்தகட்டம் குறித்து சிந்திப்பதற்கு அவகாசமில்லாது ஏற்பட்டிருந்த நிலைமையே தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ள நிலையில் அவரால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது குறித்து சிந்திப்பதற்கான அவகாசமற்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண் ஆண்டுகளுக்கு முன்னதாக பாராளுமன்ற ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமொன்றை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் நாடு பொருளாதார ரீதியில் மீண்டெழுந்த பின்னரே தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சூழல்கள் ஏற்படும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் நாட்டின் அரசியலமைப்பில் பொருளாதாரத்தினை மீட்டதன் பின்னர் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தினை காரணம் காண்பித்து தன்னுடைய அரசியல் அதிகாரத்தினை வலுப்படுத்திக்கொள்வதற்கு முனைந்து வந்தார்.
தற்போதும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தார். முன்னதாக தன்னுடைய கட்சியின் செயலாளரைப் பயன்படுத்தி காய்களை நகர்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் ஊட முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போது நீதித்துறையும் சட்டவாக்கத்துறையும் (எதிர்க்கட்சிகள்) மிகவும் உறுதியாக இருப்பதன் காரணத்தினால் அவருக்கு அடுத்தகட்டம் சிந்திப்பதற்கு இக்கட்டானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அதாவது, கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்னர் எவ்வாறு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிந்திப்பதற்கு கால அவகாசம் இருக்கவில்லையோ அதேபோன்று தான் இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து நகர்வுகளைச் செய்வதற்கு சிந்திப்பதற்கான கால அவகாசம் போதாதுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி ரணில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காரணம், தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையீனமும் கள யதார்த்தமுமே ஆகும்.
சஜித்துக்கும் அநுரவுக்கும் இடையிலான போட்டிதான் இம்முறை தேர்தலில் காணப்படப்போகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித், அநுர ஆகியோருக்கும் இடையில் பரம்பரை ரீதியாக இடைவெளியும் செல்வாக்கு செலுத்துகிறது.
ஆகவே அவரின் நகர்வுகள் அடுத்தகட்டமாக நேர்மறையான விளைவுகளை தரப்போவதில்லை என்றார்.