தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய வேண்டுகிறோம், சமஷ்டியே தீர்வு என்றும் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து.

3 months ago




தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒன்றிணைய வேண்டுகிறோம் என்றும் சமஷ்டியே தீர்வு என்றும் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குறித்த குழுவின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்தவை வருமாறு,

இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான             உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 2022 ஆம் ஆண்டு கார்த்திகை 8 ஆம் திகதி சமஷ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டிருந்தது.

இன்று வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வு அவசியம்.

ஒருங்கிணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கின்றோம்.

இலங்கையில் நாம்                            சிறுபான்மையினர் அல்லர். வடக்கு -கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத்தினராவோம்.

எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை சமஷ்டி முறைமையின் மூலம் உறுதி செய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

எனவே, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக இணையாத சந்தர்ப்பத்தில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன், குறிப்பாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டி நேரிடும் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.