விபத்துகளில் காயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நெருக்கடிகள் காணப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் விபத்துகள்
ஏற்படாது அவதானமாக செயல்பட வேண்டும் என்று யாழ். போதனா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் க.மணிதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். போதனா மருத்துவ மனையின் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தலைமையில் மருத்துவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட மருத்துவர் மணிதீபன், யாழ்ப்பாணம் போதனா
மருத்துவமனையில் 1350 படுக்கை வசதிகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் 20 படுக்கை வசதிகளுமே உள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் வீதிவிபத்துகளால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சேர்க்கப்பட்டனர். ஏனைய விபத்துகளால் 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையானவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் 100 பேர் வரையில் வீதி விபத்துகளால் உயிரிழந்தனர். இதேபோன்று, இதர விபத்துகளால் 200 பேர் வரையில் உயிரிழந்தனர். இவ்வாறு
விபத்துகளுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் 16 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களில் பலர் உத்தியோகத்தர்களாவர். பொது மக்கள் அவதானமாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்படுவதன் மூலம் முடிந்தவரை விபத்துகளை தவிர்த்துக்கொள்ள முடியும். பொது மக்கள் விபத்துகள் தொடர்பில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - என்றும் அவர் கூறினார்.