புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியத் தரப்புகள் 25ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. எம்.பி பொ. கஜேந்திரகுமார் தெரிவிப்பு

1 day ago



புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியத் தரப்புகள் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் எதுவுமே இல்லாத 13ஆவது திருத்தத்தைக் கூடத் தருவதற்கு வழங்க மறுத்து வந்த அரசாங்கம் தற்போது உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பை அவசர அவசரமாகக் கொண்டுவந்து ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தவும், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை மட்டுப்படுத்தவுமே வாய்ப்புகள் அதிகம்.

எனவே, அப்படிப்பட்ட முயற்சியை முறியடிப்பதாக இருந்தால் தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டத்தில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும்.

எமது நிலைப்பாட்டை நாங்கள் ஓரணியில் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே, அது தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், பேச்சு வார்த்தைகளுக்காகவும்  எதிர்வரும் 25ஆம் திகதி, வடக்கு, கிழக்கு 70 மாகாணங்களில் ஏதாவது ஒரு பொது இடத்தில் நாங்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம்.

நானும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எஸ்.சிறீதரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் நடத்திய கலந்துரையாடல்களுக்கு அமைய இந்த முடிவுகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்தக் கலந்துரையாடலின்போது, மூன்று தரப்புகளும் தாங்கள் விரும்பியபடி கருத்துகளை முன்வைக்கவும், பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவும் முடியும்.

அவர்கள் சார்பான பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கு உரிமையுள்ளது.

எந்தத் தடையும். நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை.

நாம் இந்த விடயத்தில் விரைவாகச் செயற்பட வேண்டும். கால இழுத்தடிப்பை மேற்கொண்டு அரசாங்கத்துக்கு சந்தர்ப்பங்களை வழங்கக்கூடாது.

வடக்கு - கிழக்கில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

ஆனால், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள தமிழரசுக்கட்சி 8 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வடக்கு - கிழக்கின் பெரும்பான்மை உள்ளது என்ற அடிப்படையில் நாம் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்றார்.