வன்னி பாடசாலைகளில் உள்ள வளக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வன்னி எம்.பி துரைராசா ரவிகரன்
வன்னி பாடசாலைகளில் உள்ள வளக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிரும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் வளங்களை சமமாகப் பகிருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை அண்மையில் தேசிய ரீதியில் சாதித்த வன்னியைச் சார்ந்த மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலைகளுக்கு வளங்கள் சமத்துவ அடிப்படையில் பகிரப்படவேண்டும்.
இன்னும் வன்னி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் இலத்திரனியல் வளப்பட்ட வளநிரப்பல் போதுமான அளவில் இல்லை.
வன்னியில் முல்லை வலயம் மற்றும், மன்னார் வலயங்களில் கணினி வள நிலையம் இல்லை. பாடசாலைகளில் சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை.
அந்த வகையில் கல்விசாரா ஊழியர்கள், பாடசாலைப் பணியாளர், இரவு நேரக் காவலாளி போன்றோரின் தேவைகளும் உள்ளன.
குறிப்பாக வன்னியில் போதுமான நிதியிடல் இல்லை. இன்றளவும் முல்லைத்தீவுக் கல்வி வலயத்தில் ஒரு கணினியுடன் இயங்கும் பாடசாலைகள் தான் உள்ளன.
இதேவேளை, மாணவர்களிடையே விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலான முழுமையான வளங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தோட்டவெளி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பாடசாலை மட்டத் தேசிய மெய்வல்லுனர் போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார்.
அதேவேளை, முல்லைத்தீவு, கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி சுபாஸ்கரன் பவித்திரா தேசிய ரீதியிலான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பத்து மாணவர்கள் தேசிய ரீதியிலான மல்யுத்தப் போட்டியில் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
அத்தோடு முல்லைத்தீவு வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவன் ரதீஸ் சந்தோஷ், தேசிய ரீதியிலான குண்டு தள்ளுதல் போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு வன்னியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய ரீதியில் போட்டியிட்டு தங்கங்களையும், ஏனைய பதக்கங்களையும் பெறுகின்ற போதும் அந்த மாணவர்களுக்கும் பாரிய தேவைப்பாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக பயிற்றுவிப்பாளர்கள் போதாமை, பயிற்சி செய்வதற்கான முறையான மைதானங்கள் இன்மை, பயிற்றுவிப்புக்கான உபகரணங்கள் இன்மை என பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
எனவே இது தொடர்பான விளையாட் டுத்துறை அமைச்சு இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.