தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கட்சிகளின் தலைவர்கள் இன்று கையெழுத்திட்டனர்.
ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமக்கென ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள். அதனடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் உச்சபட்ச தன்னாட்சியைக் கோருவதற்கான உரித்துடையவர்கள்.
நீண்ட வரலாற்றையும் மிகச் செழிப்பான பண்பாட்டையும் கொண்ட தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை சிதைக்கும் நோக்கத்துடன், நிலப்பரப்பு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், மதரீதியாகவும் என பல்வேறு வழிகளில் இலங்கைத்தீவில் இனவழிப்பு நடவடிக்கைகள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் தீவிரவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.
ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு தேசிய இனமாக இருப்பதும். கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தை வாழ்விடமாகக் கொண்டிருப்பதும் அவர்களது பிரதான அரசியல் பலமாகும் என்னும் யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் முதலில் பிராந்தியமயப்பட்டது; பின்னர் அனைத்துலகமயப்பட்டது.
நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகம் காட்டி வந்திருக்கின்ற கரிசனைகளைச் சிறீலங்கா அரசு எந்தவிதத்திலும் பொருட்படுத்தவும் இல்லை; ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவுமில்லை. அதேநேரத்தில். முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் மக்களிற்கு சமஉரிமையை வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு நகர்வுகளைக்கூட இதுவரை காலமும் முன்னெடுக்கவில்லை.
இனப்படுகொலைக்கு எதிரான நீதியுமின்றி, அரசியல் தீர்வுமின்றி. ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவமும் இன்றி பாரபட்சங்களும், அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும், ஆக்கிரமிப்புக்களும். அழிப்புகளும், பிரித்தாளும் தந்திரங்களும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அரசியல், பொருளாதார, இராணுவச் சூழலில் தமிழ் மக்களின் தேசிய இருப்பு கேள்விக்குள்ளாகி நிற்கின்றது. இவ்வாறான வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், இதுகால வரையிலான அனுபவங்களின் அடிப்படையிலும், சிறீலங்காவின் 2024 அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் தரப்பில் செயல்முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் தேவையும் அவசியமும் எழுந்திருக்கின்றது.
இந்த யதார்த்தத்தின் பின்னணியில், தமிழ்த் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் பிரதான நோக்கத்தோடு, எதிர்வரும் சிறிலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்று. தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன், இதனைச் செயல்முனைப்புடன் கையாளும் நோக்கில், பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவைக் கொண்டுள்ளன.
இதன்பிரகாரம் இவ்வுடன்படிக்கையின் சம தரப்புக்கள் என்னும் வகையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவை பின்வரும் அடிப்படையில் புரிந்துணர்வு ஒன்றினை ஏற்படுத்திக் கொள்கின்றன.